இந்த போன் வந்த கவனம் மக்களே! காவல்துறை கொடுத்த எச்சரிக்கை!
Tamil Nadu Police cyber awareness Pension Fraud
ஓய்வூதியதாரர்களை குறி வைத்து நடக்கும் புதிய இணைய மோசடி செயல் குறித்து தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு காவல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், இணைய மோசடியாளர்கள் தங்களை அரசு அதிகாரிகள் போல போலியாக அடையாள படுத்திக்கொண்டு ஓய்வூ பெற்ற பணியாளர்களிடம் ஓய்வூதியம் தொடர்பாக தங்களுக்கு உதவி செய்வதாக சூழச்சி செய்து அவர்களின் வங்கி கணக்கு மற்றும் பணம் இருப்பு தொடர்பான தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓய்வூதிய அலுவலக அதிகாரிகள் பேசுவதாக சொல்லி மோசடியில் பணத்தை இழந்த பல புகார்கள் வந்துள்ளது. இந்த மோசடியாளர்கள் அப்பாவி பொது மக்களை குறிப்பாக மூத்த குடிமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மாற்று திறனாளி திட்டம், வயது முதிர்ந்தோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை பெற தங்களுக்கு உதவி செய்வதாக சொல்லி மோசடி செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 28 புகார்கள் NCRP - மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த மோசடி நடப்பது எப்படி?
மோசடிக்காரர்கள் ஓய்வூதிய அலுவலக அதிகாரிகள் பேசுவதாக சொல்லி பொது மக்களை தொடர்பு செய்வார்கள், தொடர்பு கொண்டு மாற்று திறனாளி திட்டம், வயது முதிர்ந்தோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் கீழ் தங்களுக்கு பணம் வந்துள்ளது என்று மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் சொல்லி மேற்படி பணத்தை பெற தங்களுக்கு உதவி செய்வதாக கூறி சிக்க வைப்பார்கள்.
பின்னர் தங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று சொல்லி அவர்களின் பண இருப்பு விபரம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர்களிடம் பெற்று அவர்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர்.
மோசடிக்காரர்கள் முக்கிய தகவல்களை பாதிக்கபட்டவர்களிடம் whatsApp மூலம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப சொல்லி கேட்டு பெறுகின்றனர், அதன் மூலம் எளிதாக பணம் தொடர்பான தகவல்களை பெற்று மோசடி செய்கின்றனர். குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் இதில் அதிகம் பாதிக்கபடுகின்றனர். இது அவர்களுக்கு பொருளாதார பாதிப்பு மட்டும் இல்லை மன ரீதியாகவும் மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஓய்வூதியம் அவர்களின் வாழ்வாதரம் தொடர்பானது.
பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகள்:-
• அரசு அலுவலகத்திலிருந்து அழைப்பதாகக் கூறும் எந்தவொரு நபரின் அடையாளத்தையும் சரிபார்க்கவும். தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களை தொலைபேசியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அடையாளம் காணாத எண்களிலிருந்து அழைப்புகளைப் பெற்றால் அதனை தவிர்த்து விடுங்கள்.
• அழைப்பாளரின் அடையாளத்தை நீங்கள் உறுதியாக அறியாவிட்டால் ஈடுபட வேண்டாம்.
• பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை கண்டு அஞ்சாமல் கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
• அறியப்படாத அல்லது அந்நியர்கள் அனுப்பிய சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்யவோ பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம், ஏனெனில் அவை உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி தரவை சமரசம் செய்யலாம்.
• இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும்.
• தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.
• மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.
• சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.
• உங்கள் வங்கி மற்றும் கடனட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.
• முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.
• மேலும்,பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrimegovin என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.
English Summary
Tamil Nadu Police cyber awareness Pension Fraud