பரபரப்பான சூழலில் விறுவிறுப்பான கூட்டம்.. சட்டசபையின் முடிவு என்னவாக இருக்கும்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டசபையின் கடைசி கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே மாதம் 10-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றதுடன் இந்தக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், அடுத்த சட்டசபை கூட்டம் ஆறு மாதத்துக்குள் கூட்ட வேண்டும் என்ற விதிகள் உள்ளது. அந்த வகையில், அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்பதால், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது. 

அந்த முடிவின் படி, தமிழக சட்டசபையின் மழைக்காலத்திற்கான கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டம், சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் மு.அப்பாவு, மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பார். அத்துடன் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து, இந்த மழைக்கால கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்னென்ன செய்வது? என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர்  தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொள்கின்றனர். இந்த சட்டசபைக் கூட்டம் மூன்று அல்லது நான்கு நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. 

அதன் அடிப்படையில், சட்டசபையில் நாளை துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்தக் கூட்டத்தின் இறுதி நாளில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாரின் விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட உள்ளன. 

அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார். எனவே, அவருக்கே இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அதே நேரத்தில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இப்போது அதற்கான எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். 

எனவே, அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பது இன்று தெரிந்துவிடும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு?, மூன்று விசாரணை அறிக்கைகளின் முடிவு என்ன? என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த சட்டசபை கூட்டத் தொடரில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu assembly meeting in head office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->