தமிழகம் வரும் அமித்ஷா - காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.!!
tamilnadu congrass protest against union minister amitsha
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஓராண்டு நாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்துள்ளார். அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளதாவது:- "மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் பாரபட்சம், மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லை என்றால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு நிதி வழங்க மறுப்பது, இந்தி மொழி மற்றும் நீட் தேர்வு திணிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாக இந்தியா கூட்டணி கட்சியினர் மீது வழக்குகள், சோதனைகள் மற்றும் அடக்குமுறைகள் என்று சர்வாதிகார மற்றும் பாசிச முறையில் அமித்ஷா செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை தமது அதிகார பலத்தால் அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் தமிழகத்திற்கு அடிக்கடி வருகை புரிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக கவர்னரை பயன்படுத்தி தமிழக அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார். ஆனால், அதற்கெல்லாம் பாடம் புகட்டுகிற வகையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் கவர்னரின் செயல்பாடுகளுக்கு முடிவுகட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு நேற்று வருகை தந்துள்ளார் . அவருக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிற வகையில், எனது தலைமையில் இன்று (11.4.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு, "தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற அமித்ஷாவே திரும்பிப் போ" என்ற கண்டனக் குரல் ஒலிக்கிற வகையில் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
English Summary
tamilnadu congrass protest against union minister amitsha