தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. முழு விபரம்.!
Tamilnadu toolgate price increased from today
நாடு முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 566 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அவற்றில் 48 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்படும் என தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே கடந்த ஏப்ரம் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் 4 மாத இடைவெளியில் தற்போது மீண்டும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓமலூர், தர்மபுரி, சமயபுரம், கரூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது
அதன்படி, சமயபுரம் சுங்க சாவடியில் காருக்கு ஒரு நாள் சுங்க கட்டணம் ரூ. 45-ல் இருந்து அதே விலையாகவும், மாதாந்திர கட்டணம் ரூ.1,400-ல் இருந்து 1,605 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணமாக, ரூ.165-ல் இருந்து ரூ.185 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4,905 இல் இருந்து ரூ.5,620 ஆக உயர்கிறது. லாரிக்கு சுங்க கட்டணம் ரூ.265 இல் இருந்து ரூ.300 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.7,880 இல் இருந்து ரூ.9,035 ஆக உயர்த்தப்படுகிறது.
இந்த கட்டணங்கள் அனைத்தும் முன்பு இருந்ததை விட 15% அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி சுங்கச் சாவடி வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதில், செல்லும் ஜீப் ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.230 இல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்ந்துள்ளது.
கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு நாளில் பலமுறை பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.344-ல் இருந்து ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கார் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாதக் கட்டணமானது ரூ.1,955-ல் இருந்து ரூ.2,210 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. லாரி மற்றும் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.6,845-ல் இருந்து ரூ.7,735 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
English Summary
Tamilnadu toolgate price increased from today