அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் - தமிழிசை.!
thamizhisai soundarrajan support sp velumani speech
கோயம்புத்தூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.
அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவரான பிறகுதான், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்" என்று கூறியிருந்தார். இதற்கு தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
"அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தால் எஸ்.பி.வேலுமணி கூறியதுபோல் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்பது யதார்த்தமான உண்மை. அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.விற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது. கூட்டணி என்பது ஒரு அரசியல் வியூகம். 2026-ல் என்ன கூட்டணி என்பதை இப்போது என்னால் கூற முடியாது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று யாருமே எங்களது கட்சியில் சொல்ல முடியாது. தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அ.தி.மு.க. குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள். அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
thamizhisai soundarrajan support sp velumani speech