திருவள்ளுவருக்கு கனிமொழி சொன்ன கலர்! பின்னணியில் பெரியார்!
Thiruvalluvar issue Kanimozhi choice black
கடந்த சில வருடங்களாக திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் விபூதியிட்ட புகைப்படத்தை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்திற்கு திமுக, விசிக, திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நெற்றியில் விபூதி, காவி உடை உடன் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பழைய சர்ச்சையை மீண்டும் எழுப்பி உள்ளார்.
மேலும், "ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்" என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கையில், "திருக்குறள் பற்றிய அடிப்படை, திருவள்ளுவர் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை என்பதுதான் ஆளுநரின் பதிவு காட்டுகிறது.
ஏனென்றால் திருவள்ளுவர் ஒரு துறவி என்று யாருமே சொன்னது கிடையாது. அவருக்கு திருமணம் ஆகி மனைவி இருந்ததாகவும் ஒரு கருத்து இருக்கிறது.
மேலும் திருவள்ளுவர் இல்லறம் பற்றி அவ்வளவு அழகாக ஒரு கவித்துவமாக எழுதியிருக்க கூடியவர். திருக்குறளைப் படித்து புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கும் தமிழர்களாகிய நாம் திருவள்ளுவரை துறவியாக பார்த்ததில்லை.
திருக்குறளில் மதம் சார்ந்த அடையாளங்கள் எதுவும் இல்லை. எனவே, சனாதனத்தையோ, இந்து தத்துவத்தையே இல்லை வேறு எந்த மதத்தையுமே திருவள்ளுவர் மீது திணிக்க முடியாது. இதுதான் நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.
மதங்களைக் கடந்து மனிதத்தை பேசுவது தான் திருக்குறள். மனிதநேயத்துக்கு ஒரு நிறம் உள்ளது, அது தான் அவருடைய நிறம்.
வேண்டுமென்றால் மனிதநேயத்திற்கு ஒரு அடையாளமாக திகழ்ந்த பெரியாரின் கருப்பு நிறத்திலேயே திருவள்ளுவருக்கு உடை அணியலாம். வேற நிறத்திற்கும் வாய்ப்பு இல்லை" என்று கனிமொழி தெரிவித்தார்.
English Summary
Thiruvalluvar issue Kanimozhi choice black