மதுரை : பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது.!
three young boys arrested for drugs sales to school students in madurai
மதுரை மாவட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் வழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் அந்த விவகாரத்தில் தொடர்பு உடையவர்களை கைதுசெய்ய உத்தரவிட்டார்.
அதன் படி, தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் போதைப்பொருள் விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையின் போது மேலக்கால் சாலையில் உள்ள பள்ளி அருகே மூன்று பேர் இருசக்கரவாகனத்தில் வந்து மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை கொடுப்பது தெரியவந்தது. இதையறிந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் வழங்கிய மூன்று பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில் 28 போதை மாத்திரைகள் பிடிபட்டது. அதன் பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்தனர்
அந்த விசாரணையில், அவர்கள் மூன்று பேரில் ஒருவர் துவரிமான் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரகு, ஒருவர் கணேசபுரத்தைச் சேர்ந்த முத்து, மற்றொருவர் எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த அருண் சக்கரவர்த்தி என்பது தெரிய வந்தது.
அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், இரண்டு செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களில், அருண் சக்கரவர்த்தி என்பவர் ரஷ்யாவில் மருத்துவம் படித்து பாதியிலேயே விட்டு விட்டு மதுரைக்கு வந்து மருந்து கடை ஒன்று நடத்தி வருகிறார். அவரிடம் ரகு, முத்து ஆகிய இருவரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு காயங்களை குணப்படுத்துவதற்காக சில வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
அதுபோன்ற மாத்திரைகளை, போதை மாத்திரை என்று கூறி விற்பனை செய்ய மூன்று பேரும் முடிவு செய்து, அதனை மாணவ-மாணவிகளுக்கு விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
three young boys arrested for drugs sales to school students in madurai