கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்திற்கு நிவாரணம்! பாமகவின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு!
TN Govt announced relief fund for vimalraj family
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கபடி போட்டியின் போது களத்திலேயே உயிர்நீத்த கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்திற்கு நிவாரணமாக மூன்று லட்சம் ரூபாய் தமிழக அரசு அறிவிப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட பண்ருட்டி அருகே மானடிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில், புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற கல்லூரி மாணவர் அந்த ஊர் அணிக்காக கலந்து கொண்டு விளையாடும் போது, களத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
விமல் ராஜ் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், குடும்பத்தின் எதிர்காலமாக இருந்த அவரது மறைவு, குடும்பத்தை நிலைகுலைய செய்தது. இதனிடையே அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமல்ராஜ் குடும்பத்தினருக்கு நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக வெளியான அரசு செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ்(21) என்ற இளைஞர் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த திரு.சஞ்சய் (எ) விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Govt announced relief fund for vimalraj family