ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிடுக்கு பிடி.."மீறினால் கடும் நடவடிக்கை".. கூட்டுறவு சங்கம் எச்சரிக்கை..!!
Tngovt circular to regularly update stocks in the ration shop
தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் 34,803 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உணவுப் பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் சில ரேஷன் கடைகளில் பணி புரியும் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ரேஷன் கடையில் பொருட்கள் இருந்தாலும் இல்லை என கூறுவது, மக்களை அலை கழிப்பது, கள்ளச் சந்தையில் விற்பது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
அதேபோன்று அட்டைதாரர்கள் வாங்காத ரேஷன் பொருட்களுக்கு வாங்கியதாக கணக்கு காட்டி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. ஆனாலும் நுகர்வோர்கள் வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மலிவு விலையில் விற்கப்படும் பொருட்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் பில் போட்டு கள்ளச் சந்தையில் விட்டுவிடுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் எல்லா உணவுப் பொருட்களுக்கும் தேவை இருப்பதாக நினைத்து அரசும் அதிக அளவில் கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக பில் போட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். நுகர்வோர்கள் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டதாக புகார் எழுந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Tngovt circular to regularly update stocks in the ration shop