தமிழ்நாட்டில் ரூ. 951.27 கோடி வரி ஏய்ப்பு! தமிழக அரசு அதிர்ச்சி அறிக்கை!
TNGovt Report Tax Scam
தமிழ்நாடு வணிக வரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில், 318 போலிப் பட்டியல் வணிகர்கள் மொத்தம் ரூ. 951.27 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், போலி முத்திரைத்தாள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நியாயமான வணிகர்களின் நலனை உறுதி செய்யும் விதமாக போலிப் பட்டியல் வணிகர்கள் மீது தொடர்ச்சியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இதன் பேரில், மார்ச் 14 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில், வணிக வரி ஆணையரின் உத்தரவின் பேரில் இரண்டு கட்டமாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, மார்ச் 12ஆம் தேதி, மாநிலம் முழுவதும் திட்டமிட்ட வகையில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 318 போலி நிறுவனங்கள், ரூ. 951.27 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மெட்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனம், ரூ. 12.46 கோடி அளவுக்கு போலி உள்ளீட்டு வரி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயபரகாஷ் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.