களைகட்டும் தசரா திருவிழா - குலசேகரப்பட்டினத்தில் நாளை சூரசம்காரம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் படி இந்தத் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 

இந்தத் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். மேலும், அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு தசரா குழுவிலும் காளி, சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், கிருஷ்ணர், நாராயணர், அனுமர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர். 

கோவில்களில் தசரா பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வழிபடுகின்றனர். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது. குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

இந்த தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நாளை நடைபெற உள்ளது. அன்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tomarrow soorasamhaaram in kulasekarapatinam temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->