கோவை அருகே சோகம்!...மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழப்பு!
Tragedy near coimbatore new bridegrooms tragically killed by electric shock
கோவையில் வேலை பார்த்து வந்து புது மாப்பிள்ளை, தனது வீட்டில் ஏற்பட்ட மின்விசிறி பழுதை சரிசெய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள மலையடிவார பகுதியை சேர்ந்த தர்னேஷ்- ஸ்ரீமதி ஆகிய இருவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கணவன்-மனைவி இருவரும் கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில், வீட்டில் இருந்த மின்விசிறி திடீரென்று பழுதானதால், தர்னேஷ் அதனை சரிசெய்து கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்ட அவரது மனைவி கதறி துடித்து அழுதார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Tragedy near coimbatore new bridegrooms tragically killed by electric shock