பாம்பன் தூக்குப்பாலத்தில் சென்சார் கருவி திடீர் பழுது.!
train service stop in pamban train bridge for sensor equipement problam
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்திலிருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கடந்த 1914-ம் ஆண்டு முதல் பல நூற்றாண்டுகளாக சேவை செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலையினால், பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அத்துடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.
இதற்கிடையே தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவி திடீரென பழுதாகியுள்ளது. இதனால், பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் கடக்கும்போது அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரம்-மதுரை செல்லும் ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரெயில், மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் மண்டபம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேசுவரத்திற்கு புறப்பட்ட ரெயில் இன்று அதிகாலை நான்கு மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகள் இன்று காலை பாம்பன் வந்து ரெயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரி செய்யும் பணி இன்று மாலைக்குள் முடிவடையாத பட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
train service stop in pamban train bridge for sensor equipement problam