உயிரோடு விளையாடாதிங்க! உடனே ரத்து பண்ணுங்க - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
TTV Dhinakaran Say About TN Govt Bus Drivers private
போக்குவரத்துக் கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஒப்பந்தம் மூலம் 400 ஓட்டுநர்கள் நியமிக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஒப்பந்தம் மூலம் 400 ஓட்டுநர்கள் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து போக்குவரத்து தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என துறை அமைச்சர் உறுதி அளித்ததற்கு மாறாக அரசு போக்குவரத்து தனியார் மயமாக்கப்படுகிறதோ என்று தொழிலாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
தனியார் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்படும் விதம், அவர்களின் திறன் குறித்து ஊழியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் அரசு விரைவுப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டால் அதில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நேரிடும் என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, பயணிகளின் உயிரோடு விளையாடாமல் 400 ஓட்டுநர்களை நியமிப்பதற்கான ஒப்புதலை ரத்து செய்து, அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள தற்போதைய நடைமுறையிலேயே ஓட்டுநர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
TTV Dhinakaran Say About TN Govt Bus Drivers private