உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய அணி - த.வெ.க தலைவர் அறிவிப்பு.!
tvk leader vijay new team start for members joining
நடிகர் விஜய் கடந்த மாதம் 2ஆம் தேதி அரசியலுக்கு வருகைத் தருவதை உறுதிபடுத்தினார். இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றதையடுத்து, த.வெ.க கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும், நிர்வாகிகள் நியமனம் பற்றி அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம்.
இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்.மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்குக் கீழ்க்கண்டவாறு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
*மாநிலச் செயலாளராக குமாரபாளையத்தைச் சேர்ந்த சி.விஜயலட்சுமி.
*மாநில இணைச் செயலாளராக குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த எஸ்.என்.யாஸ்மின்,
*மாநிலப் பொருளாளராக கோவையைச் சேர்ந்த வி.சம்பத்குமார்,
*மாநிலத் துணைச் செயலாளராக ஓடைப்பட்டியைச் சேர்ந்த ஏ.விஜய்அன்பன் கல்லணை,
*மாநிலத் துணைச் செயலாளராக கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.எல்.பிரபு உள்ளிட்டோர் நியமிக்கப்படுகின்றனர்.
இந்தப் புதிய அணி. கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tvk leader vijay new team start for members joining