முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம் - விசாரணையில் சிக்கிய பார் உரிமையாளர்.!
two peoples arrested for murder case in trichy
திருச்சி மாவட்டத்தில் உள்ள, துறையூர் அருகே கீரம்பூர் காந்திநகர் காலனியை சேர்ந்த பெருமாள் - ராசாத்தி தம்பதியினருக்கு நந்தகுமார், கார்த்திக் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் கார்த்திக் அடிவாரம் பகுதியில் இயங்கி வந்த பார் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பாரை அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பாரில் வேலை செய்த கார்த்திக் கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த தாய் ராசாத்தி விசாரணை நடத்தியதில், கார்த்திக் கல்லூரி மாணவியை காதலித்ததும், இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்ததனால் மனம் வெறுத்துப்போன கார்த்திக் சென்னைக்கு சென்றதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ராசாத்தி பார் நடத்தி வந்த வினோத்தின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, வினோத் மற்றும் கார்த்திக்கின் சகோதரரான நந்தகுமார் இருவரும் சேர்ந்து, விஜய் என்பவரிடம் கார்த்திக் குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, விஜய்க்கும், வினோத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், வினோத் அருகில் இருந்த கட்டையை எடுத்து விஜயை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே வினோத் மற்றும் நந்தகுமார், விஜயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டுச் சென்று, தாளூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில் புதைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தொழிலாளர்கள் உதவியுடன் தோண்டி பார்த்ததில் ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்தது விஜய் என்றும், அவர் கொலை செய்து புதைக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வினோத், நந்தகுமார் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
two peoples arrested for murder case in trichy