குமரியில் பதற்றம்.."சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு".. போலீஸ் குவிப்பு..!!
Veerashivaji idol was broken in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளாக சத்ரபதி சிவாஜியின் 9 அடி சிலை இருந்து வருகிறது. சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்த சிலைக்கு ஹிந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி கடந்த ராம நவமியன்று சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் சிலையின் தலைப்பகுதியை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் குவிய தொடங்கினர். சிலை உடைப்பு சம்பவம் குறிந்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்தனர். பதற்றம் ஏற்படாது வண்ணம் உடைக்கப்பட்ட சிலையின் தலைப் பகுதியை போலீஸார் துணியால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சிலையை உடைத்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலய தலைவர் நடராஜன் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் பதட்டமான நிலை நிலவுவதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த சிலை உடைப்பு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Veerashivaji idol was broken in kanniyakumari