சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை மதுபாட்டில்கள் மீதும் ஒட்டி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை!
Vijayakanth say about Vishnupriya suicide issue
தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை அனைத்து மதுபாட்டில்கள் மீதும் ஒட்டி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "வேலூர் மாவட்டம் சின்ன ராஜா குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா, தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் மதுவால் தினம் தினம் சீரழிந்து வருகின்றன. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய தமிழக அரசோ தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இளைய சமுதாயத்தின் பாதையை மாற்றி அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறது.
மேலும் சட்டவிரோத மது விற்பனையால் மோதல்களும், கொலைகளும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடாமல், ஒவ்வொரு மதுபாட்டில் மீது ரூ.10 கூடுதலாக விற்பது குறித்தும், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து கேள்வி எழுப்பும் செய்தியாளர்களை பார்த்து 'நீங்கள் குடிக்கிறீர்களா' என தமிழக அமைச்சர் பொறுப்பில்லாமல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மது பாட்டில்களில் 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்ற வாசகத்தின் கீழ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை ஒட்டி, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் அனைத்து டாஸ்மார்க் கடைகள் முன்பும் சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அந்த புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்" என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Vijayakanth say about Vishnupriya suicide issue