அமெரிக்கா மற்றும் தென் கொரியா வருடாந்த கூட்டு இராணுவ பயிற்சி; கடலுக்குள் ஏவுகணைகளை ஏவி பதறவைத்த வட கொரியா..!
US and South Korea joint military exercise North Korea fires missiles into the sea
வட கொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் நேற்று 10 தேதி வருடாந்திர கூட்டு இராணுவ பயிற்சியைத் தொடங்கினர். தொடர்ந்து 11 நாட்கள் குறித்த கூட்டு பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த இராணுவப் பயிற்சி இந்த இரு படைகளின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த பயிற்சியின் போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும். தாக்குதலுக்கு முந்தைய இராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

எனவே அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டுள்ளதாகவும், வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளதாக தென்கொரிய தெரிவித்துள்ளது.
அத்துடன், தென் கொரியா மற்றும் அமெரிக்கா இராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது. இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறு கடந்த வாரம் ஒரு பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய KF-16 போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு வீசியுள்ளனர்.இதன் போது 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கூட்டு இராணுவ பயிற்சி மற்றும் கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சு ஆகியவை அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
English Summary
US and South Korea joint military exercise North Korea fires missiles into the sea