தமிழகத்தில் ஒரு ராஜஸ்தானா? குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் நடந்து செல்லும் கிராம மக்கள்!
Villagers walk 3 km for drinking water well water
சிவகங்கை அருகே மூன்று கி.மீ. நடந்து சென்று விவசாய கிணற்றில் கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே தர்மபட்டி கொண்டபாளையம், ஊராட்சி தேனம்பட்டி கிராமத்தில், சுமார் 300 குடும்பங்கள் உள்ளன.
சென்ற 2020-ம் ஆண்டு, இந்த கிராமத்தில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இந்த தொட்டி மூன்று ஆண்டுகளாக பயன்பாடு எதுவும் இல்லாமல் உள்ளது. இங்கு இருக்கும் மின் மோட்டார்கள் பழுதானதால், 4 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளும், பயன்படுத்தப்படாமல் சும்மா கிடக்கிறது.
மேலும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட தண்ணீரும் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த காரணங்களால், இந்த பகுதி மக்கள் 3 கி.மீ. தூரம், நடந்து சென்று விவசாயக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது.
அவர்களின் அன்றாட பணிகளுக்கு செல்வதில், இவ்வளவு தூரம் வரை சென்று தண்ணீர் எடுப்பதால், வீண் தாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் விரைவில் முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதைப்பற்றி அக்கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி பேசியதாவது:
எங்கள் ஊர் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எங்களுக்கு எந்த வித உதவியும் இல்லாமல் பயன்பாடற்று கிடக்கிறது.அதுமட்டுமில்லாமல் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் காவிரியில் இருந்து தண்ணீரும் வரவில்லை.குடிநீருக்காக தினமும் நாங்கள் அலைந்து வருகிறோம். இதனால் எந்தவிதமான வேலைக்கும் எங்களால் செல்ல முடியவில்லை என்று அவர் கூறினார்.
(இந்த செய்தியில் சில மாதிரி புகட்டப்படங்கள் இடம்பெற்றுள்ளன)
English Summary
Villagers walk 3 km for drinking water well water