விழுப்புரத்தில் வினோத முறையில் மதுபாட்டில்கள் கடத்திய ஆசாமி கைது!
Vilupuram Liquor Smuggling man arrested
விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்திய நபர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ரகசிய கண்காணிப்பில் இருந்த தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒரு நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அவர் தனது உடல் முழுவதும் மதுபாட்டில்களை ஒட்டிக்கொண்டு கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் குறித்த நபர், விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த பாவாடை மகன் நாகமணி (வயது 40) என்பதும் உறுதி செய்யப்பட்டது. போலீசார் அவரிடம் இருந்து 90 மில்லி அளவிலான 100 மதுப்புட்டிகளும், 150 மில்லி அளவிலான 25 பிராந்தி மதுப்புட்டிகளும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, நாகமணியை கைது செய்த போலீசார், மதுவிலக்கு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Vilupuram Liquor Smuggling man arrested