மருது சேனை அமைப்பு நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
Viruthunagar maruthu senai kumaravel death case
விருதுநகரில் மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் கொலை சம்பந்தமாக, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மேலரத வீதியை சேர்ந்த நகராட்சி ஒப்பந்ததாரர் குமரன் (56 வயது) மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளராக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை விருதுநகர் மீன் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்த குமரனை, ஆறு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சாராம்ரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது.
தடுக்க முயன்ற குமரனின் உறவினர் ராம்குமார் (33 வயது) மற்றும் ரூபி என்ற 36 வயது பெண் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
காயமடைந்த மூன்று பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், குமரன் அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராம்குமார், ரூபிஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கொலை செய்த குற்றவாளிகள் கூலிப்படையினர் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
மேலும், நகராட்சியில் ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக மையிட்டான்பட்டியைச் சேர்ந்த ஞானசேகரன் தரப்புக்கும், மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி, காரைக்குடியில் ஞானசேகரன் மகன் வினித் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குமரன், ஆதிநாராயணன் மீது வழக்கு பதியப்பட்டு, ஆதிநாராயணன் மட்டும் கைது செய்யப்பட்டார்.
பின்னர், வினித் கொலை வழக்கில் குமரன் பெயரை போலீசார் நீக்கிவிட்டனர். ஆனால், ஞானசேகரன் தரப்புக்கு குமரன் மீது விரோதம் இருந்து வந்த நிலையில், வினித் கொலைக்கு பழிக்குப் பழியாக குமரன் கொலை செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கொலை வழக்கில் ஞானசேகரன், பால்பாண்டி, அரவிந்தராஜ், சந்திரசேகர், விக்ரமன், அமிர்தசங்கர், அமிர்தராஜ், ஹரிஹரன், சிவபிரகாஷ் மற்றும் 6 கூலிப்படையினர் உட்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருக்கும் இவர்களை 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Viruthunagar maruthu senai kumaravel death case