எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார்..சொல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
We are ready to face any kind of damage Chief Minister MK Stalin
மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்த அரசு உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 11-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. மேலும் தென்மாவட்டங்களிலும் அன்றில் இருந்து தற்போது வரை இடைவிடாமல் அடைமழை கொட்டி வருகிறது.
இந்தநிலையில் இந்த மழை வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது; ஆனால் பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை. மழை பாதிப்புகள் குறித்து அந்தந்த ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மூத்த அதிகாரிகளை களத்துக்கு அனுப்பியுள்ளோம்.
மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்த அரசு உள்ளது. மழை பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வரவில்லை. தென்காசிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செல்ல உள்ளார். திருநெல்வேலிக்கு அமைச்சர் கே.என்.நேரு செல்ல உள்ளார். அணைகள், ஏரிகள் திறப்பு குறித்து மக்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை, எங்களால் முடிந்தவரை ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
We are ready to face any kind of damage Chief Minister MK Stalin