ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் - சென்னையில் சோதனை ஓட்டம் வெற்றி..!
without driver metro train trail run in chennai
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், அந்த வழித்தடத்தில் வரும் டிசம்பரில் சேவை தொடங்க உள்ளது. இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் நேற்று மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மாலை 4.30 மணிக்கு நடைபெற இருந்த சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மாலை 6 மணி வரையில் நடைபெறாமல் இருந்தது. இந்த மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்து, தீப்பொறிகளும் வெடித்து சிதறின. ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.
இதையடுத்து, மின்வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டதன் காரணமாக மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் பராமரிப்பு வாகனம் மூலம் சென்று அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. எந்த வித இடர்பாடும் இன்றி இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. பூந்தமல்லி மெட்ரோ ரெயில் பணிமனையில் இருந்து முல்லா தோட்டம் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கான சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த ரெயில் 20 முதல் 30 கி.மீ வேகத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. பூந்தமல்லி-போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
English Summary
without driver metro train trail run in chennai