ஆன்லைனில் மணமகள் தேடிய என்ஜினீயர் - ஆசை வார்த்தைக் கூறி பணம் சுருட்டிய கில்லாடி பெண்.!
woman 23 lakhs money fraud in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர், கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல கிருஷ்ணன். தொழில் அதிபரான இவர் ஏற்கனவே திருமணமான மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் மறுமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டார்.
அதில், அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண், கோகுல கிருஷ்ணனை தொடர்பு கொண்டு தனது பெயர் ரதி மீனா என்று அறிமுகம் செய்து கொண்டு தானும், திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி வருவதாக கூறினார். இதைத் தொடர்ந்து இருவரும் நட்பாக பழக தொடங்கினர்.
இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த பெண், தான் ஒரு ஆன்லைன் செயலியை அனுப்புவதாகவும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கோகுல கிருஷ்ணனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய கோகுல கிருஷ்ணன், அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.23 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்.
ஆனால் அதன்பின்னர் அந்த பெண் கோகுல கிருஷ்ணனை தொடர்பு கொள்ளவில்லை. பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. அப்போது தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த என்ஜினீயர் கோகுல கிருஷ்ணன் சம்பவம் தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை சுருட்டி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.
English Summary
woman 23 lakhs money fraud in coimbatore