திருமண வரன் தேடும் இளைஞர்களிடம் மோசடி செய்த கில்லாடி பெண் - கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!
women arrested for money fraud in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் விவசாயம் செய்து வரும் இளைஞர் ஒருவர், திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது சுயவிவரங்களை பதிவு செய்து தனக்கு பொருத்தமான மணப்பெண்ணை தேடி வந்துள்ளார். இதைப்பார்த்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்ற பெண் அந்த இளைஞருடன் அறிமுகமாகி இருவரும் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரியா தனது அக்காவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய இளைஞர் மொத்தம் 7 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கிறார். இந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட சில நாட்களில் பிரியாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த இளைஞர் நாமக்கல் மாவட்டத்தில் பிரியா கூறிய முகவரிக்கு சென்று விசாரித்ததில் அங்கு அப்படி யாருமே இல்லை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் உடனடியாக சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி போலீசார், விசாரணை நடத்தியதில் திருமண மோசடியில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை கைது செய்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரியாவின் முதல் கணவர் உயிரிழந்த பின்னர், அவர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்து விவகாரத்து பெற்று அடுத்தடுத்து பல்வேறு ஆண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதிலும் குறிப்பாக திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து அவர்களிடம் நெருக்கமாகப் பேசி மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
அவர் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி ரூ.12 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் பிரியவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women arrested for money fraud in coimbatore