சென்னை மாநகராட்சி ஆணையரை நீரில் சந்தித்த முனைவர் சௌமியா அன்புமணி! - Seithipunal
Seithipunal


சென்னையில் குப்பை எரிஉலை மற்றும் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி நேரில் வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 7 உலக தூய காற்று நாளை (September 7: World Clean Air Day) முன்னிட்டு, பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் அவர்களை இன்று ரிப்பன் மாளிகையில் நேரில் சந்தித்து, சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சென்னை மாநகரின் சுற்றுச்சூழலை சீர்கெடுக்கும் தவறான திட்டங்களை கைவிடவும் வலியுறுத்தினார்கள்.

சென்னை மாநகராட்சியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மிகத்தவறான திட்டங்களான (False Solutions) குப்பை எரிஉலை அமைக்கும் திட்டம் (Waste Incineration) மற்றும் அடுக்குமாடி கார் நிறுத்தம் கட்டும் திட்டம் (Multi-level car parking - MLCP) ஆகியவற்றை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், அறிவியல்பூர்வமாக மேம்படுத்தப்பட்ட சென்னை தூய காற்று செயல்திட்டம் (Chennai Action Plan for Control of Air Pollution 2021) மற்றும் சென்னை எந்திர வாகனமில்லா போக்குவரத்து (Non-Motorised Transport – NMT) கொள்கை ஆகியவற்றை முழுவதுமாகவும் விரைவாகவும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிகழ்வின் போது பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் இர. அருள், இணைச் செயலாளர்கள் ச.க. சங்கர், வி. இராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் வ.ஆ. பத்மநாபன், க. பொன்மலை கோ. இராஜசேகரன், சந்தானம், பசுமைத் தாயகம் ஆலோசகர்கள் மு. ஜெயராமன், சாம் பால், வே. வடிவேல், வண்ணை சத்தியா, கோபி, அசோக் மணவாளன், காட்டு ராஜா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனுவின் முழு விவரம் :

சென்னை மாநகருக்காக பசுமைத் தாயகம் முன்வைக்கும் கோரிக்கைகள்

குப்பை எரிஉலை (Waste Incineration) திட்டங்களை கைவிட வேண்டும்.

அடுக்குமாடி கார் நிறுத்த (Multi-level car parking - MLCP) திட்டங்களை கைவிட வேண்டும்.

சென்னை தூய காற்று செயல்திட்டத்தை (Chennai Action Plan for Control of Air Pollution 2021) முழுமையாக செல்படுத்த வேண்டும்

மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து (Non-Motorised Transport - NMT) முறைகளை செயல்படுத்த வேண்டும்.

செப்டம்பர் 7, உலக தூய காற்று நாளில் (World Clean Air Day) பெருநகர சென்னை மாநகராட்சியிடமும், CMDA, CUMTA, MTC, TNPCB உள்ளிட்ட அரசு அமைப்புகளிடமும், தமிழ்நாடு அரசிடமும், இந்திய அரசிடமும் இக்கோரிக்கையை முன்வைக்கிறோம்.

ஒருபக்கம் 2025 – 26ஆம் ஆண்டுக்குள் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டில் 40 சதவீதம் அளவு குறைக்க வேண்டும் என்று அரசின் NCAP சென்னை தூய காற்று செயல்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம், காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், 2030ஆம் ஆண்டில் சென்னையில் 27 சதவீதம் மாசு வெளியேற்றம் அதிகரிக்கும் என CSTEP நிறுவனம் 25.08.2023 அன்று வெளியிட்ட ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான முரண்பாடான சூழலில் பசுமைத் தாயகத்தின் இக்கோரிக்கைகளை தொடர்புடைய அமைப்புகள் செயலாக்க வேண்டியது ஒரு முதன்மையான தேவை என்று கருதுகிறோம்.

False Solution 1: ரூ. 5045 கோடியில் குப்பை எரிஉலை (incinerator) அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்

குப்பை உருவாக்கப்படுவதை குறைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும். குப்பையை முறையாக தரம் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பையை மட்க வைக்க வேண்டும். மறுசுழற்சி குப்பை மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். இதுதான் அறிவியல் பூர்வமான குப்பை மேலாண்மை முறை ஆகும். மாறாக, குப்பை எரிஉலையில் எல்லா குப்பையையும் ஒன்றாக எரிப்பது அறிவியல் முறைக்கு எதிரானது ஆகும். மேலும், மிக அதிக செலவு பிடிக்கக் கூடியதும் ஆகும்.   

இந்நிலையில், சென்னையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட ஆபத்தான குப்பைகளை எரிப்பதற்காக ரூ. 5,045 கோடி செலவில் குப்பை எரிஉலைகள் (Waste Incineration) அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான திட்டம் ஆகும். காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்படையும் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

குப்பை எரிஉலைகளில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு உள்ளிட்ட வாயுக்களும், காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10 நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் வெளியாகும். இவற்றில் பெரும்பான்மையானவை மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; காற்றில் அழியாத தன்மை கொண்ட இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய நச்சுப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல் நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் இது கடுமையாக பாதிக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் சென்னையில் குப்பை எரிஉலையால் படிப்படியாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  

குப்பையை எரிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகமாகும். மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகிறது.

இந்தியாவில் உருவாகும் குப்பை - எரிஉலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரிஉலைத் திட்டங்கள் படுதோல்வி அடைந்தன. அவை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன.

சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும்.  குப்பையின் வெப்ப மதிப்பு (calorific value) அதிகமாகவும் ஈர அளவு (moisture content) குறைவாகவும் இருக்க வேண்டும். மேலும் மண், செங்கல், கண்ணாடி போன்ற எரிக்க முடியாத பொருட்களும் குப்பையில் இருக்கக் கூடாது. ஆனால், சென்னை மாநகரில் உருவாக்கப்படும் குப்பை மிக அதிக அளவு காய்கறிக் கழிவுகளும் உணவுக் கழிவுகளும் உள்ளன. இவை ஈரமாகவும் (higher moisture content) எரிப்பதற்கான கலோரி மதிப்பு குறைவாகவும் (low calorific value), மண், புழுதி கலந்ததாகவும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு குப்பை எரிஉலை (incinerator) அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

எனவே, ரூ. 5045 கோடியில் குப்பை எரியாலை (incinerator) அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இதற்கு மாறாக பூஜ்ய குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை (Zero Waste Chennai) மாநகர கோட்பாட்டை சென்னை மாநகராட்சி விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

False Solution 2: சென்னை மாநகரம் முழுவதும் 10 இடங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தங்கள் (MLCP) கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்

சென்னை மாநகரில் வாகன நிறுத்தங்களை முறைப்படுத்தினால் போக்குவரத்து சீரடையும், காற்று மாசுபாடு குறையும், மாநகராட்சிக்கும் மிகப்பெரிய அளவு வருமானம் கிடைக்கும். ஆனால், அதற்கான திட்டங்களை மேற்கொள்ளாமல் மிக மோசமான அடுக்குமாடி கார் நிறுத்தங்களை (Multi-level car parking – MLCP) பொது இடங்களில் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது

போக்குவரத்து பிரச்சினைகளுக்கு அடுக்குமாடி கார் நிறுத்தங்கள் (Multi-level Car Parking - MLCP) ஒருபோதும் தீர்வாகாது. மாறாக, இவை போக்குவரத்தை சீரழிக்கும் என்பதுதான் அறிவியல் பூர்வமான உண்மை. எங்கெல்லாம் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் கட்டப்படுகின்றனவோ, அங்கெல்லாம் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும். மேலும், பொதுப்போக்குவரத்து வசதிகளை உருவாக்கத் தேவைப்படும் நிதியும் இடமும் வீணடிக்கப்படும். அதனால், மேலை நாடுகளில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் ஒழிக்கப்படுகின்றன. இந்த கேடான திட்டத்தை சென்னை மாநகரில் திணிப்பதை தவிர்க்க வேண்டும்.

தி.நகர் தணிகாச்சலம் சாலையில் 40 கோடி ரூபாயில் சென்னையின் முதல் அடுக்குமாடி கார் நிறுத்தம் கட்டப்பட்டது. இப்போது தி.நகர் வர்த்தகப்பகுதியில் இடத்தை ஆக்கிரமித்து வெறும் கட்டிடம் தான் நிற்கிறது! அங்கு கார் நிறுத்த எவரும் இல்லை! 'செருப்புக்கு ஏற்றபடி காலை வெட்டும் செயல்' எனும் பழமொழி போன்று, அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை காப்பாற்றுவதற்காக பாண்டி பஜாரில் மட்டும் சாலையோரத்தில் வாகனம் நிறுத்தும் கட்டணத்தை 200% உயர்த்தியது சென்னை மாநகராட்சி! சாலையில் வாகனம் நிறுத்தினால் மணிக்கு 60 ரூபாய் கட்டணம், அதுவே, அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் வெறும் 20 ரூபாய் தான். ஆனாலும்கூட எவரும் அதனை பயன்படுத்தவில்லை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA)’ சென்னை பெருநகருக்கான வாகன நிறுத்தக் கொள்கையை (parking policy) உருவாக்கிவருவதாக அறிவித்துள்ளது. ஆனால், அந்த கொள்கை அறிக்கை வெளிவருவதற்கு முன்பாகவே 10 இடங்களில் சென்னை மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை அமைப்பது தேவையற்றது ஆகும்.

CUMTA அதன் இணைய தளத்தில் Complete Street Planning Guidelines 2020 என்பதை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இணைய தளத்திலும் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் நீடித்த போக்குவரத்து முறைக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் உதவாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தெருக்களில் வாகனம் நிறுத்துவதை மேலாண்மை செய்யும் (on-street parking management) முறையை முதலில் கொண்டுவர வேண்டும். அதற்கு பின்பே அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவதற்கு தேவை உள்ளதா என்று ஆராய வேண்டும் என்கிறது. (First implement on-street parking management and then assess the demand for Construction of Multi-level car parking – MLCP).

சென்னை நகருக்கான மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்துக் கொள்கையை 2014-இல் சென்னை மாநகராட்சி வெளியிட்டது (The Non-Motorised Transport (NMT) Policy of Greater Chennai Corporation). அதில் நடைபாதை, மிதிவண்டி, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்போம். வாகன நிறுத்தத்தை கடைசி தேவையாகக் கருதுவோம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியை கடைபிடிக்க வேண்டும். நடைபாதை, மிதிவண்டி, பொதுப்போக்கு வரத்துக்கு வசதிகளை முழுமையாக்கும் முன்பாக அடுக்குமாடி கார் நிறுத்த திட்டங்களை திணிக்கக் கூடாது.

அடுக்குமாடி கார் நிறுத்தங்களை மக்கள் வரிப்பணத்தில் அமைப்பது சமூகநீதிக்கு எதிரானது. சென்னை போக்குவரத்தில் கார்களில் பங்களிப்பு வெறும் 7% மட்டுமே. ஆனால், பேருந்து, நடைபாதை, மிதிவண்டி, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பங்களிப்பு 56% ஆகும். (ஆதாரம்: Chennai Climate Action Plan 2023). மிகப்பெரும்பாலானோரின் தேவையான பொதுப்போக்குவரத்து வசதிகளை புறக்கணித்துவிட்டு, மிக மிக சிறுபான்மையானோருக்கான வசதிகளை அதிகமாக்குவது சமூக அநீதி ஆகும். ஒருவேளை அடுக்குமாடி கார் நிறுத்தங்களை அமைத்துதான் ஆகவேண்டும் என்கிற தவறான முடிவை வலுக்கட்டாயமாக மேற்கொண்டால் – இத்திட்டத்திற்காக மக்கள் வரிப்பணத்திலோ, பொதுச்சொத்துகளிலோ ஒரு ரூபாய் கூட செலவிடக் கூடாது. No subsidy to parking எனும் கோட்பாட்டை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

No subsidy to parking: Cities must not subsidise on-street or off-street parking for personal motor vehicles, including multi-level parking, implicitly or explicitly. Where the private sector develops off-street parking for personal motor vehicles, it must bear the full cost of the land, construction, maintenance, and operations and recoup its investment directly from parking users without any form of cross-subsidy using public funds. Cities must ensure that users pay for the full cost of parking facilities based on the opportunity cost of land, capital cost, operations, maintenance costs, and temporal demand (FUTURE OF CITIES Planning, Infrastructure, and Development Edited by Ashok Kumar and D.S. Meshram - by Routledge 2022)

சென்னை காலநிலை செயல்திட்டம் (Chennai Climate Action Plan) 2023 ஜூன் 13 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2030ஆம் ஆண்டுக்குள் சென்னை போக்குவரத்தில் 80% நடத்தல், மிதிவண்டி அல்லது பொதுப்போக்குவரத்தின் மூலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு தற்போது 56% ஆக இருக்கும் பொதுப்போக்குவரத்து வசதிகளை 2030ஆம் ஆண்டில் 80% ஆக அதிகரிக்கும் போது கார், இருசக்கர மோட்டார் வாகனம், ஆட்டோக்களின் பங்கு 44% அளவில் இருந்து 20% ஆக குறையும். இந்த திட்டம் உண்மையாகவே செயல்படுத்தப்பட்டால் – சென்னையில் கூடுதல் கார் நிறுத்தங்களுக்கான தேவையே இருக்காது.

எனவே, சென்னை மாநகரம் முழுவதும் 10 இடங்களில் பலகோடி செலவில் அடுக்குமாடி கார் நிறுத்தங்கள் (MLCP) கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.

3. சென்னை தூய காற்று செயல்திட்டத்தை (Chennai Action Plan for Control of Air Pollution 2021) முழுமையாக செல்படுத்த வேண்டும்

தேசியத் தூய காற்று திட்டத்தின் கீழ், சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான - Action Plan for Control of Air Pollution in Million Plus City of Tamilnadu, Chennai U. A - திட்டத்தினை 2021 அக்டோபர் மாதம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டது.

சென்னைக்கான தூய காற்று செயல்திட்டத்தை 2021-22 மற்றும் 2025 – 26 இடையே செயல் படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் 4.2.2022 அன்று இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி ஆகியவை கூட்டாகக் கையொப்பமிட்டுள்ளன. 2025-26ஆம் ஆண்டுக்குள் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டில் 20% முதல் 30% அளவு குறைப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். (இந்திய அரசு இந்த இலக்கினை 40% ஆக 2023 மார்ச் மாதம் உயர்த்தி அறிவித்துள்ளது). 2021 – 22ஆம் ஆண்டுக்கான நிதியாக ரூ. 181 கோடி ரூபாய் இந்திய அரசால் அளிக்கப்பட்டது.

ஆனால், சென்னை மாநகரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடையும் வகையில் அமையவில்லை. முழு அளவில் செயலாக்கப்படவும் இல்லை.

எடுத்துக்காட்டாக, சென்னையின் சுற்றுச்சூழலைச் சீர்கெடுத்து மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் மாசுக்கள் எங்கிருந்து எந்த அளவுக்கு வருகிறது என்பதைக் கணக்கிடுவதற்கான Source Apportionment and Carrying Capacity Assessment ஆய்வைத் தேசியத் தூய காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் சென்னை ஐஐடி நிறுவனம் நடத்தியது. இந்த அறிக்கை 2022 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சென்னைக்கான தூய காற்று செயல்திட்டத்தில் கூறப்பட்டது. பின்னர், ஆய்வு முடியும் நிலையில் உள்ளது; ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று 11.09.2022 அன்று சென்னை ஐஐடி தெரிவித்தது. ஆனால், ஓராண்டு முடியும் நிலையில் இன்னமும் அந்த அறிக்கை வெளிவரவில்லை.

சென்னைக்கான தூய காற்று செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றில் சுமார் 90 சதவீதத்துக்கு மேலான நடவடிக்கைகள் (Action) செயலாக்கப்படவே இல்லை. இந்த நடவடிக்கைகளுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் (Time limit for implementation) ஏற்கெனவே முடிந்துவிட்டது. அதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன:

ஒருபக்கம், சென்னைக்கான தூய காற்றுத் திட்டம் அறிவியல் பூர்வமானதாகவோ தூய காற்று இலக்கினை அடைய வழிசெய்வதாகவோ உருவாக்கப்படவில்லை. உலக நலவாழ்வு அமைப்பும் (WHO) ஐநா சுற்றுச்சூழல் திட்டமும் (UNEP) முன்வைக்கும் மெய்ப்பிக்கப்பட்ட தூய காற்றுத் திட்டங்களை இது கொண்டிருக்கவில்லை. மறுபக்கம், அரைகுறையாக உருவாக்கப்பட்ட திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

மேலும், சென்னை தூய காற்று செயல் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பான ஆய்வறிக்கையை (Report for Performance Evaluation for National Clean Air Programme) கடந்த 2022 பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி வெளியிட்டது. ஆனால், இத்திட்டம் குறித்து அதற்கு பின்னர் எந்தவிதமான விளக்கமும் 2023ஆம் ஆண்டில் வெளியிடப்படவில்லை.

மேற்கண்ட அனைத்து குறைபாடுகளும் களையப்பட வேண்டும். சென்னை மாநகருக்கான தூய காற்று செயல் திட்டத்தை மக்கள் பங்கேற்புடன் அறிவியல்பூர்வமாக மேம்படுத்தி முழுமையாக செயலாக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

4. மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து முறையை (Non-Motorised Transport) முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல், மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள் பயன்பாடுகள் இல்லாத போக்குவரத்து முறைகளான நடைபாதை மற்றும் மிதிவண்டிப் போக்குவரத்து தான் நகரங்களுக்கான மிக முதன்மையான போக்குவரத்து முறையாக இருக்க வேண்டும். நகர மக்களின் பெரும்பாலான அன்றாடத் தேவைகள் ஒருசில கிலோ மீட்டர் தொலைவுக்குள் கிடைத்து விடுகின்றன. இந்தத் தொலைவுக்கு கார்களிலோ, இருசக்கர மோட்டார் வாகனத்திலோ செல்ல வேண்டிய தேவையே இல்லை.

ஆனாலும், நடப்பதற்கும் மிதிவண்டியில் செல்லவும் போதுமான கட்டமைப்புகள் இல்லாததால் பெரும்பாலானவர்கள் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளனர். இந்த நிலையை மாற்றி நடக்கவும் மிதிவண்டிப் பயணத்துக்கும் வசதிகளை உருவாக்குவது காற்று மாசுபாட்டைப் பெருமளவில் குறைக்கும்.

சென்னை மாநகராட்சி 2014ஆம் ஆண்டில் வெளியிட்ட வாகனமில்லாப் போக்குவரத்துக் (Chennai Non-Motorised Transport Policy) கொள்கையில் 2018ஆம் ஆண்டுக்குள் 80% சாலைகளில் தரமான நடைபாதையை அமைப்போம் என வாக்குறுதி கூறப்பட்டது. ஆனால், அதற்கு மேலாக 5 ஆண்டுகள் கடந்தும், இன்னமும் பெரும்பாலான சாலைகளில் முறையான நடைபாதைகள் அமைக்கப்படவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 13.06.2023 அன்று வெளியிட்ட சென்னை காலநிலை செயல்திட்டம் (Chennai Climate Action Plan) 2023 அறிக்கையில், 2030ஆம் ஆண்டுக்குள் சென்னை போக்குவரத்தில் 80% நடத்தல், மிதிவண்டி அல்லது பொதுப் போக்குவரத்தின் மூலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேற்கண்ட ஆவணங்களில் கூறப்பட்டுள்ளவாறு, சென்னை மாநகருக்கான முழுமையான நடைபாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், நகரங்களின் மிகச்சிறந்த போக்குவரத்து வாகனம் மிதிவண்டி தான் என்பதால், சென்னைப் பெருநகருக்கான மிதிவண்டி முழுமைத் திட்டத்தை (Chennai Bicycle Masterplan) வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

சென்னையின் அனைத்து தெருக்களையும் 'முழுமைத் தெருக்கள்’ ஆக மாற்றும் திட்டத்தை (Complete Streets Plan) சென்னை மாநகராட்சியும் CUMTA-ஆவும் வெளியிட்டுள்ளன.

இடைவெளி இல்லாத தொடர்ச்சியான நடைபாதை, மிதிவண்டிப் பாதை, தெளிவான சாலை கடக்கும் பகுதிகள், முறைப்படுத்தப்பட்ட வாகன நிறுத்தங்கள், மரங்கள், தூய்மைப் பராமரிப்பு, மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிச் சிறுவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் பயன்படும் வகையில் சாலைகளையும் தெருக்களையும் மாற்றியமைப்பது இதுவாகும்.

பாதுகாப்பு, பொதுச்சுகாதாரம், சமூகநீதி, பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, வாழ்க்கைத் தர மேம்பாடு உள்ளிட்ட அனைத்து நோக்கங்களையும் கொண்டது முழுமைத் தெருக்கள் கொள்கை ஆகும். இருதய நோய்கள், நீரிழிவு, உடல்பருமன் என ஏராளமான கேடுகளுக்குத் தீர்வாகவும் இவை அமைகின்றன.

இத்தகைய 'முழுமைத் தெருக்கள்’ (Complete Streets) திட்டத்தை சென்னை மாநகரில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கோரிக்கை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விரிவான கருத்துகள் அடிப்படையில் - சென்னை மாநகராட்சியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மிகத்தவறான திட்டங்களான (False Solutions) குப்பை எரிஉலை அமைக்கும் திட்டம் (Waste Incineration) மற்றும் அடுக்குமாடி கார் நிறுத்தம் கட்டும் திட்டம் (Multi-level car parking - MLCP) ஆகியவற்றை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், அறிவியல்பூர்வமாக மேம்படுத்தப்பட்ட சென்னை தூய காற்று செயல்திட்டம் (Chennai Action Plan for Control of Air Pollution 2021) மற்றும் சென்னை எந்திர வாகனமில்லா போக்குவரத்து (Non-Motorised Transport – NMT) கொள்கை ஆகியவற்றை முழுவதுமாகவும் விரைவாகவும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Clean Air Day Pasumai Thayakam head


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->