#பிலிப்பைன்ஸ் | பயணிகள் படகு தீப்பிடித்ததில் 31 பேர் உயிரிழப்பு...!
31 died as boat catches fire near Philippines
பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்காசிய நாடான பிலிப்பைன்சில் லேடி மேரி ஜாய் 3 மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரிலிருந்து பயணிகள் படகு சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென்று படகு தீப்பிடித்துள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகு மற்றும் கடலில் தத்தளித்த மக்களை மீட்டு அருகிலிருக்கும் ஜாம்போங்கா மற்றும் பாசிலான் பகுதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 230 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கடலோர காவல் படையினர், தீ விபத்து ஏற்படும் பொழுது பெரும்பாலான மக்களுக்கு தூங்கிக் கொண்டிருந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டவுடன் உயிரை காப்பாற்றுவதற்கு கடலுக்குள் குதித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் காணாமல் போய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளனர். இதனிடையே தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சுமார் 7000 தீவுகளை கொண்ட பிலிப்பைன்சில் அவ்வப்போது மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு விதிகளை புறக்கணிப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
31 died as boat catches fire near Philippines