வங்கதேச எல்லையில் உண்ண உணவின்றி தவிக்கும் 32 தமிழக மாணவர்கள் - அரசு உதவி செய்ய வேண்டுகோள்..!!
32 Tamilnadu Students Got Stuck in Bangladesh Border
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடக்கும் போராட்டம் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பயின்று வரும் இந்திய மாணவர்களை கல்லூரி நிர்வாகம், இந்திய - வங்கதேச எல்லையில் இறக்கி விட்டுள்ளது.
இந்நிலையில் மொத்தம் 150 இந்திய மாணவர்கள் இன்று காலை முதல் உண்ண உணவு இல்லாமலும், இணையத் தொடர்பு இல்லாததால், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றனர். அவர்களில் 32 பேர் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"கடந்த 4 நாட்களாக இணையம் உள்ளிட்ட எந்த தொலைத்தொடர்பு சேவையும் இல்லை. எனவே எங்களால் எங்கள் குடும்பத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கல்லூரி பேருந்து வங்கதேச எல்லையில் எங்களை இறக்கி விட்டது. நாங்களாகவே தான் இந்திய எல்லையைக் கடந்து வந்து மேற்கு வங்க எல்லைப் பகுதியில் இன்று காலை முதல் தவித்து வருகிறோம். நாங்கள் வீடு திரும்ப அரசு உதவி செய்ய வேண்டும்" என்று எல்லையில் தவிக்கும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடந்து வரும் போராட்டம் தற்போது கலவரமாக வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக வங்கதேசம் முழுவதும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப் பட்டுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவம் களமிறக்கப் பட்டுள்ளது. மேலும் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மேலும் வங்கதேசம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. மேலும் அங்கு நடந்த கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
English Summary
32 Tamilnadu Students Got Stuck in Bangladesh Border