எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்..!
England Former PM Boris Johnson resigned MP post
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2022 வரை இங்கிலாந்தின் பிரதமராக பதவி வகித்தார். அவருடைய பதவி காலங்களில் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தது. அப்போது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா பெருந்தொற்றின் பொழுது போரிஸ் ஜான்சன் கொரோனா விதிகளை மீறி தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். போரிஸ் ஜான்சனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன.
மேலும் பிரதமர் அதிகாரத்தை ஜான்சன் தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக அரசாங்கம் தனிக்குழு அமைத்து விசாரித்தது. இதைத்தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 நாட்கள் நாடாளுமன்றத்திலிருந்து போரிஸ் ஜான்சனை இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜான்சன் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுவது மிக கடினமாக உள்ளது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாமல், கட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் கூட பெறாமலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணை குழுவிலிருந்து பெறப்பட்ட கடிதத்தில், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
English Summary
England Former PM Boris Johnson resigned MP post