ஹிஜாப் அணியாததால் நேர்காணலை ரத்து செய்த ஈரான் அதிபர்..!
erope president cancel live programe
தனியார் தொலைக்காட்சியின் சர்வதேச பத்திரிக்கையாளர் கிறிஸ்டியன் அமன்பூர் பேட்டி எடுக்கும்போது புர்கா அணிய மறுத்ததால் நேர்காணலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ரத்து செய்தார்.
சிஎன்என் தொலைக்காட்சியின் சர்வதேச பத்திரிக்கையாளர் கிறிஸ்டியன் அமன்பூர். இவர், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை அவரின் அலுவல்களுக்கு இடையே நேர்காணல் செய்வதாக இருந்தார்.
இந்த நேர்காணலுக்கு பல வாரங்களாக திட்டமிடப்பட்டதில் கடந்த புதன்கிழமை இரவு நேர்காணல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நேர்காணல் தான் இப்ராஹிம் ரைசி அமெரிக்காவில் கொடுக்கும் முதல் நேர்காணல் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தனது நேர்காணலை ரத்து செய்ததாகவும், பேட்டி காணும் கிறிஸ்டியன் அமன்பூர் புர்கா அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் கிறிஸ்டியன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, "ஈரானில் கடந்த வாரம் மாஷா அமினி என்ற 22 வயது பெண் காவலர்களால் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் பெண்கள் தங்களின் புர்காகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு நடக்க இருந்த நேர்காணலில் நான் இது குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் ஈரான் அதிபர் ரைசியிடம் கேட்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.
இந்தப் பேட்டி அமெரிக்க மண்ணில் ஈரான் அதிபர் ரைசி வழங்கும் முதல் பேட்டியாகும். இதற்காக பல வாரங்கள் திட்டமிட்டப்பட்ட நிலையில், எட்டு மணி நேரம் உழைத்து மொழிபெயர்ப்பு கருவிகள், லைட்ஸ், கேமரா அனைத்தையும் தயார் நிலையில் வைத்து காத்திருந்தோம். ஆனால், அங்கு அதிபர் ரைசி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அங்கு 40 நிமிடங்களுக்குப் பிறகு ஈரான் அதிபரின் உதவியாளர் ஒருவர் வந்தார். இது முஹரம், சஃபர் ஆகிய புனித மாதங்கள் என்பதால் நான் புர்கா அணிந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் ரைசி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
அந்த கோரிக்கையை நான் மிகவும் தன்மையாக மறுத்து விட்டேன். இது நியூயார்க், இங்கு ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டமோ வழக்கமோ இல்லை என்றும், இதற்கு முன்பு இருந்த எந்த ஈரான் அதிபரும், அவர்களை ஈரானுக்கு வெளியே நான் அவர்களை பேட்டி எடுத்தபோதும் புர்கா அணிய வற்புறுத்தியதில்லை என்றும் சுட்டிக்காட்டினேன்.
நான் ஹிஜாப் அணியவில்லை என்றால், இந்த நேர்காணல் சாத்தியம் இல்லை என்று அந்த உதவியாளர் உறுதியாக தெரிவித்தார். மேலும், இது மரியாதை குறித்த விஷயம் என்றும், இது ஈரானின் நிலைமை என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து முன்பே தெரிவிக்கப்படாத மற்றும் எதிர்பாராத இந்த நிபந்தனையை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தேன். இதன் பின்னர் நாங்கள் வெளியேறிச் சென்றோம் பிறகு நேர்காணல் நடக்கவில்லை. ஈரானில் ஹிஜாப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்கு ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அந்நாட்டு அதிபர் ரைசியிடம் பேச வேண்டிய முக்கியமான தருணமிது" என்று கிறிஸ்டியன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, ஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம். அந்த மாகாணத்தின் சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற பெண் கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர்.
அப்போது அவர் முறையாக புர்கா அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். பிறகு போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற அவர் கடந்த 16-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் வலுவடைந்தது.
இந்தப் போராட்டத்தில் இதுவரை எட்டு பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரானில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவைகள் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அங்கு நிகழும் போராட்டங்களை பகிர முடியாத நிலையில் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்
English Summary
erope president cancel live programe