உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா போட்டியின்றி தேர்வு...!
Indian origin Ajay Banka elected as World Bank chief
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலக வங்கியின் அடுத்த தலைவராக போட்டியின்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் மே மாதம் உலக வங்கியின் தேர்வுக்குழுவால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கியின் தற்போதைய தலைவரான டேவிட் மால்பாஸின் காலநிலை நடவடிக்கை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தனிப்பட்ட கருத்துக்கள் என பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன. இதனால் பதவிக்காலம் முடியும் முன்னரே ஜூன் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து மார்ச் 29ஆம் தேதி வரை உலக வங்கியில் புதிய தலைவருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை முன்மொழிந்தார். மேலும் விண்ணப்ப காலங்களில் வேறு எந்த நாடும் தலைவர் பதவிக்கு யாரையும் முன்நிறுத்தவில்லை.
இந்நிலையில் போட்டியின்றி உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா தேர்வு செய்யப்படவுள்ளார். இதையடுத்து சர்வதேச நிறுவனங்கள் மற்றும் முன்னணி உலக நாடுகள் அஜய் பங்காவின் தேர்வுக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றன. மேலும் பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian origin Ajay Banka elected as World Bank chief