வங்கதேசத்துக்கு ரகசிய பயணம் செய்த பாகிஸ்தான் உளவுத்துறை; கண்காணிப்பில் மத்திய அரசு..!
Pakistani intelligence made a secret trip to Bangladesh Central government under surveillance
பாகிஸ்தானுக்கு வங்கதேச ராணுவக் குழு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில்,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உயரதிகாரிகள் சிலர், வங்கதேசத்துக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பயணங்களின் நோக்கம் மற்றும் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் சமீபத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்களால் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.
தற்போது அங்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ராணுவத்தின் உதவியுடன் இந்த இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
வங்கதேச ராணுவத்தின் உயரதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் கம்ருல் ஹசன் தலைமையில், ஆறு பேர் அடங்கிய குழு, கடந்த 13 முதல் ஆம் தேதி வரை, பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிர் உள்ளிட்டோரை அந்த குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர். இதற்கிடையே, கடந்த, 21ஆம் தேதி பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் உயரதிகாரிகள் மூன்று பேர், வங்கதேசத்துக்கு ரகசிய பயணம் மேற்கொண்டனர்.
ஐ.எஸ்.ஐ.,யின் பகுப்பாய்வு பிரிவின் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஷாஹித் அமிர் அப்சர் தலைமையில், இந்தக் குழு தற்போதும் வங்கதேசத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராவல்பிண்டியில் இருந்து துபாய் வழியாக இவர்கள் வங்கதேசம் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வங்கதேச ராணுவ குழுவினர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான செய்திகளை பாகிஸ்தான் வெளியிட்டது. ஆனால், இந்தப் பயணம் தொடர்பாக,இரு நாடுகளும் எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.
இந்நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையேயான இந்த திடீர் சந்திப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
ஏனெனில், இதனால், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பது கவனிக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாகவும், இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த விவகாரம் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்து பிரிந்ததுதான் வங்கதேசம். கடந்த, 1990களில் பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் அதிகரித்த போது, அந்த குழுக்கள், வங்கதேச எல்லையில் இருந்து, நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல்களை நடத்தின.
கடந்த, 1996ல் முதல் முறையாக ஷேக் ஹசீனா, வங்கதேச பிரதமராக பதவியேற்ற பின், இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டினார்.தங்களுடைய மண்ணில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுவதை அவர் ஒடுக்கினார்.
கடந்த, 1971ல் நடந்த போரில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களையும் ஷேக் ஹசீனா தண்டித்தார்.இதனால் வங்கதேசத்தில் இருந்து, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட முடியாமல் இருந்தன.
தற்போது வங்கதேச இடைக்கால அரசுடன், பாகிஸ்தான் நெருங்கி வருவது, வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது. இதனால், அவர்களது செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். என்று அவர்கள் கூறியுள்ளனர்.
English Summary
Pakistani intelligence made a secret trip to Bangladesh Central government under surveillance