தீவிரமாக பரவும் புபோனிக் பிளேக் நோய் - தனிமைப்படுத்தப்பட்ட மங்கோலியா மாகாணம்
Province in Mongolia isolated as bubonic plague spreads
கிழக்காசிய நாடான மங்கோலியாவில் பிளாக் டெத் என்றும் அழைக்கப்படும் "புபோனிக் பிளேக் நோய்" தீவிரமாக பரவி வருகிறது. புபோனிக் பிளேக் என்பது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்த புபோனிக் பிளேக் பாக்டீரியா முக்கியமாக எலிகள், அணில் மற்றும் முயல்கள் போன்ற கொறித்துண்ணிகளில் காணப்படும்.
மேலும் முறையற்ற சுகாதாரம் மற்றும் கொறித்துண்ணிகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் இந்நோய் பரவுகிறது. இந்நிலையில் 21 மங்கோலிய மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாகவும், கோவி-அல்டாய் மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜூனோடிக் நோய்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த திங்கள்கிழமை கோபி-அல்தாய் மாகாணத்தில் நோயாளி ஒருவருக்கு புபோனிக் பிளேக் நோயின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாகாணம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 40-க்கும் மேற்பட்டவருக்கு நோய் தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவி-அல்டாய் மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புபோனிக் பிளேக் நோய் பரவுவதலை தொடர்ந்து மாகாணங்கள் முழுவதும் சுகாதார நிலையை மேம்படுத்தவும், மர்மோஸ் போன்ற கொறித்துண்ணிகள் வேட்டையாடுவதை தடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே இந்நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Province in Mongolia isolated as bubonic plague spreads