வங்கதேச கலவரம் - மைக்ரோசாஃப்ட் குளறுபடி - 106 தமிழக மாணவர்கள் 'தாயகம்' திரும்ப முடியாமல் தவிப்பு..!!
Tamilnadu Students Got Stuck in Bangladesh Due to Bangladesh Riot and Microsoft Mess
வங்கதேசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 106 மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
வங்கதேசத்தில் தற்போது இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே வங்கதேசம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் வங்கதேசம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து வங்கதேச கல்லூரிகளில் படிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தங்களின் தாயகம் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 106 பேர் டாக்கா விமான நிலையத்தில் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் செயல்பாட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக உலகம் முழுவதும் விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து 56 தமிழக மாணவர்கள் நேரடியாக சென்னைக்கு வர இருந்தனர்.
மேலும் 50 மாணவர்கள் கொல்கத்தா வழியாக சென்னையை வந்தடைய முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது மைக்ரோசாஃப்ட் குளறுபடி காரணமாக 106 தமிழக மாணவர்களும் டாக்கா விமான நிலையத்திலேயே சிக்கி, தவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு சிக்கியுள்ள 106 தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
English Summary
Tamilnadu Students Got Stuck in Bangladesh Due to Bangladesh Riot and Microsoft Mess