கொப்பூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடுதல் பணி..மாவட்ட ஆட்சியர் ,நீதிபதி துவக்கி வைத்தனர்!
Tree planting in Koppur Panchayat District Collector and Judge inaugurated
கொப்பூர் ஊராட்சியில் சுற்றுப்புற சூழல்- நட்பு சூழல் திட்டத்தின் கீழ் மாபெரும் மரக்கன்றுகள் நடுதல் பணியினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொப்பூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் வனத்துறை இணைந்து சுற்றுப்புற சூழல் - நட்பு சூழல் திட்டத்தின் கீழ் மாபெரும் மரக்கன்றுகள் நடுதல் பணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.அப்பொழுது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
சுற்றுப்புற சூழல்களை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுப்பு பணியினை எடுத்து வரும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை வனத்துறை ஆகியோருடன் இணைந்து இப்பணியை மேற்கொள்வது புதுமையான முன்னெடுப்பு பணியாகும். ஏனென்றால் சட்டப் பணி ஆலோசனைக் குழு ஏழை மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குவது, நீதித்துறை சார்ந்த பணிகள் போன்ற பல்வேறு பணிகளுடன் இந்த மாதிரி சமூக சீர்திருத்த நல்ல சுற்றுப்புற சூழல் உருவாக்க வேண்டும் என்ற வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு மாநில சட்ட ஆணைக்குழு, மாவட்ட சட்ட ஆணைக்குழு இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சியால் ஒவ்வொரு இடங்களில் இயற்கை சுற்றுச்சூழல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் மப்பேடு, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் இருங்கக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் தான். இங்கே உள்ள தொழிற்சாலைகளால் இந்தியாவிலேயே நாம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகின்றோம்.
ஒரு பெரிய இடத்தில் தொழிற்சாலைகள் கட்டப்படும் பொழுது அந்த இடத்தில் பத்து சதவீதம் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு மரங்கள் நடுவது , மைதானம், பூங்காக்கள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும். இது போன்ற பணிகளை மாவட்ட முழுவதும் மேற்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் திருவள்ளூர் மாவட்டம் தான் முன்மாதிரியாக விளங்கி வருகிறது என்ற சாதனையை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.அரிகுமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், மோட்டார் வாகன விபத்து வழக்கு நீதியரசர் தீனதயாளன், நில ஆர்ஜிதம் சிறப்பு நீதிமன்ற நீதியரசர் சதீஷ்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதியரசர் சோபா தேவி, விரைவு குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதியரசர் ராஜேஷ்குமார், மாவட்ட சட்ட ஆணைக்குழு செயலாளர் நளினி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், பள்ளிப்பட்டு வனச் சரக அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Tree planting in Koppur Panchayat District Collector and Judge inaugurated