ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.
மணம், சுவை கூட்டும் தன்மை ஏலத்திற்கு மிகுதியாக உண்டு. கேக்குகள், மிட்டாய்கள், இனிப்புகள் ஆகியவற்றிலும், உணவு சமைப்பதிலும் ஏலக்காய் பெருமளவு சேர்க்கின்றது.
ஏலக்காய் விந்துவைப் பெருக்கும்; காமத்தைத் தூண்டும். வயிற்று உப்புசத்தை நீக்கி செரிமானத்தை எளிதாக்குகின்றது.
மலமிளக்கும் மருந்துகளுடன் ஏலக்காய் சேர்க்கப்படுகின்றது. ஆண்மை விருத்தி லேகியங்களிலும் சேர்க்கப்படுகின்றது.
ஏலக்காய், ஏலரிசி போன்றவை நாட்டு மருந்துக் கடைகளிலும், ஏலக்காய் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும்.
ஏலக்காய், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து கொண்டு, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள செரியாமை தீரும்.
ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி தீர ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை நன்கு காய வைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும்.
2 கிராம் அளவு தூளை தேவையான அளவு எலுமிச்சம் பழச் சாற்றில் குழைத்து ஒவ்வொரு வேளை உணவிற்குப் பின்னரும், தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.
ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.
ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.
ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.
நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.
ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.
வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.
ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும். அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.
ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.
திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.
ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும். செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.