10 கோடியை தாண்டிய கொரோனா தடுப்பூசி.!
Covid Vaccination
10 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், வீடு தேடி தடுப்பூசி, ஊர்கள் தோறும் தடுப்பூசி, சிறப்பு தடுப்பூசி என பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டு வந்ததை தெரிவித்தார்.
தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக நடத்தி வருவதாகவும் இதுவரை 22 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக இருபத்தி மூன்றாவது சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளதாகவும் அந்த வரிசையில் தற்போது தமிழகத்தில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை வரை 10 கோடியே 30 ஆயிரத்து 346 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.