மேலும் ஒரு தடுப்பூசி! மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி.!
One more new vaccine for Corona
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த 'பயோலாஜிக்கல் - இ' என்ற நிறுவனம், தயாரித்துள்ள 'கோர்பேவாக்ஸ்' கொரோனா தடுப்பூசியை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அவரசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள, மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், 12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரி, அந்நிறுவனம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது.
இதற்கு, மருத்துவ நிபுணர்கள் குழு அனுமதி அளித்திருந்தனர். இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் இறுதி ஒப்புதலை பெற வேண்டியது அவசியம் என்பதால், அந்த ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், 15 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி இன்னும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
One more new vaccine for Corona