காய்ச்சல் உள்ளவர்கள் மோர், தயிர் எடுத்துக்கொள்ளக் கூடாதா? மருத்துவர்கள் சொல்வது என்ன..?
Should people with fever not take buttermilk and curd
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மோர் அல்லது நீராகாரம் குடிப்பது உடலுக்கு நல்லது. இதன்மூலம் உடல் குளிர்ச்சியும், தெம்பும் கிடைக்கும் என பொதுநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். மோரில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதனால், நமக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
தயிரில் இருந்து தயாரிக்கப்படும் நீர்ச்சத்து நிறைந்த புரோபயாடிக் உணவுதான் மோர். அதாவது பாலில் உள்ள எல்லாச் சத்துகளும் மோரிலும் இருக்கிறது. இரண்டு வயதுக்கு மேல் எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் மோர் குடிக்கலாம். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவததோடு, வாய் வறட்சியைப் நீக்குகிறது.

வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல், அல்சர், அஜீரணம் போன்ற பல வயிற்று நோய்களுக்கு மோர் ஓர் அருமருந்தாக இருக்கிறது. காய்ச்சல், சளி இருப்பவர்கள் மோர் குடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். இது முற்றிலும் தவறு. மோரில் கலக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் காய்ச்சல், சளி எதுவுமே வராது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
தயிர்சாதம் சாப்பிடலாமா.?
நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டில், ''குளிர்காலத்திலும், பனிக்காலத்திலும் தயிர்சாதம் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் சளி பிடித்துவிடும்” என்று கூறுவார்கள். ஆனால் அதுவும் உண்மை இல்லை. பாலை காய்ச்சும்போது கிருமிகள் இறந்து விடுகின்றன. எனவே, தயிரில் தீங்கு செய்யும் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை; தயிர் சாப்பிடுவதால் சளி பிடிக்கவும் வாய்ப்பில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

அத்துடன், பால் தயிராகும் போது, அது எளிதில் செரிமானமடைகிறது. பால் உறையில் இருக்கும் லாக்டிக் அமில பாக்டீரியா பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றிவிடுகிறது. இந்த அமிலமும் பாலில் உள்ள கேசீன் எனும் புரதப்பொருள், கால்சியம் தாதுவும் வினைபுரிகிறபோது, பால் தயிராக மாறுகிறது. இந்த வேதிவினைகள் எல்லாமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பல வழிகளில் உதவுகின்றன என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை.

சிலருக்குக் குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிட்டால், உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. அந்த மாதிரியான உடலமைப்பைக் கொண்டவர்களுக்குக் குளிர்ச்சியாகத் தயிரைச் சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படலாம். இவர்கள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தயிரை எடுத்து, உடனே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாதாரண அறை வெப்ப நிலையில் தயிரைச் சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள்.
காலை மற்றும் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவுடன் தயிர்சாதத்தைச் சாப்பிடலாம். உடல் பருமன், நீரிழிவு நோய் கொண்டவர்கள் கொழுப்பைத் தவிர்ப்பதற்குத் தயிர்சாதத்துக்குப் பதிலாக, மோர் சாதம் சாப்பிடலாம்’ என்று பொதுநல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
English Summary
Should people with fever not take buttermilk and curd