வர்த்தகத்திலும் பயணத்திலும் புதிய புரட்சி! துபாய் - மும்பை இடையே கடலுக்கு அடியில் அதிவிரைவு ரயில் பாதை திட்டம்! பிளான் ரேடி?
A new revolution in trade and travel A high speed undersea rail project between Dubai and Mumbai Plan ready
துபாயையும் மும்பையையும் நீருக்கடியில் இணைக்கும் அதிவேக ரயில் பாதை திட்டம் தற்போது ஆய்வுகளுடன் முன்னேறி வருகிறது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஆலோசகர் பணியகத்தின் நிர்வாக இயக்குநர் அப்துல்லா அல் ஷெஹி தெரிவித்துள்ளார்.
கலீஜ் டைம்ஸ் ஊடகத்துக்கு சமீபத்தில் வழங்கிய பேட்டியில், “இந்த திட்டம், UAE மற்றும் இந்தியா இடையேயான போக்குவரத்திலும், வர்த்தகத் துறையிலும் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.
இத்திட்டம் முதன்முதலாக 2018-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிவேக ரயில் திட்டம் தற்போது திட்ட நிலைமையில் தான் இருக்கிறது. பல்வேறு துறைகளிடமிருந்து ஒப்புதல்கள் கிடைத்த பின்னரே நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு குறித்து முடிவு செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
ரயில் வேகம் மணிக்கு 1000 கி.மீ. எனும் கணிப்பில் செல்லும் பட்சத்தில், துபாய்-மும்பை பயணம் தற்போது விமானத்தில் 4 மணி நேரமாக இருக்கும் நேரம், ரயிலில் வெறும் 2 மணி நேரமாகக் குறையும்.
இந்த திட்டத்தின் மூலம் UAE-இந்தியா இடையேயான வர்த்தக உறவுகள் மேம்படும், மேலும் பயணிகளுக்கும், பொருட்கள் கடத்தலுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். அதிலும் முக்கியமாக, மத்திய இந்தியாவின் நர்மதா நதியிலிருந்து தண்ணீரை UAE-க்கு கொண்டு செல்லும் திட்டம் இதில் அடங்கும் எனவும் அப்துல்லா கூறினார்.
இந்த ரயில் பாதை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமன் ஆகிய நாடுகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படும். இதன்மூலம், இது ஒரு சர்வதேச வர்த்தகப் பாதையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக் கடலின் மேற்பரப்பிலிருந்து 20-30 மீட்டர் ஆழத்தில், கான்கிரீட் சுரங்கங்களுக்குள் இந்த ரயில் இயக்கப்படும். இது போன்ற பெரிய உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப தேவைகள் ஆகியவை இன்னும் ஆய்வு கட்டத்தில்தான் உள்ளன.
இதே பேட்டியில், UAE-யின் காலநிலை மாற்ற எதிர்ப்பு முயற்சிகளாக அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை கொண்டு வருவதற்கான திட்டம் குறித்து அவர் பேசினார்.
இந்த ரயில் திட்டம் ஒருமுறை செயல்படுத்தப்பட்டால், இந்தியா-அமீரகம் மட்டுமல்லாது, முழு ஆசியாவுக்கும் ஒரு வர்த்தக மேம்பாட்டு முக்கிய புள்ளியாக மாறக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
English Summary
A new revolution in trade and travel A high speed undersea rail project between Dubai and Mumbai Plan ready