75 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேர்தல்; உற்சாகத்தில் வாக்களித்த கிராம மக்கள்..!
Chhattisgarh Sukma villagers cast ballots after 75 years
சத்தீஸ்கர் மாநிலம் நக்சல் தொல்லையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒன்று. சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லபெண்டா என்ற கிராமம், 75 ஆண்டுகளுக்கு பின் தேர்தலை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் அங்கு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் அப்பகுதி வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர்.
அத்துடன், இவ்வாறு ஓட்டளித்த பலரும், 'துப்பாக்கி சத்தத்தை விட ஓட்டு தான், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்' என்று கூறியுள்ளனர். மத்திய பிரதேசத்திலிருந்து, 2000-ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதல்வராக உள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகும் நிலையில், 75 ஆண்டுகளாக அந்த பகுதியில் எந்த தேர்தலும் நடைபெறவே இல்லை. நக்சல் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்ததால் தேர்தல் நடைபெறாமல் இருந்துள்ளது. தற்போது அந்த பகுதி நக்சல் பிடியில் மெல்ல விடுபட்டு வருகிறது.
கேர்லபெண்டா கிராமத்தில் மூன்று கட்டங்களாக நடந்த பஞ்சாயத்து தேர்தலில், நேற்று முன்தினம் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் உற்சாகமாக ஓட்டளித்துள்ளனர். அத்துடன், சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த வாகனங்களில் இந்த ஊருக்கு வந்து ஓட்டளித்துள்ளதாக கூறியுள்ளனர்.

அங்கு உள்ள மக்கள் இது குறித்து கூறுகையில்; ''வளர்ச்சியை நோக்கி நாங்கள் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் முறையாக எங்களின் கோரிக்கைகளை, தலைவர்கள் முன் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.துப்பாக்கிகளை விட, ஓட்டு தான் எங்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என முழுமையாக நம்புகிறோம்.'' என்று கூறியுள்ளனர்.
சமீபகாலமாக, நக்சல்களுக்கு எதிரான தாக்குதலை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. எதிர்வரும் 2026- க்குள் நக்சல் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கர் மாறும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்பு படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், சத்தீஸ்கரில் 40 நக்சல்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Chhattisgarh Sukma villagers cast ballots after 75 years