''அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு சட்டமேல் சபைக்கு நிதிஷ் வருகிறார்; பெண்களை மதிப்பதில்லை''; முன்னாள் முதல்வர் குற்றசாட்டு..!
Nitish comes to the Legislative Assembly after smoking too much ganja Former Chief Minister alleges
பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு சபைக்கு வருவதாக முன்னாள் பீஹாரின் முதல்வரும், சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவரான ரப்ரி தேவி குற்றஞ் சாட்டியுள்ளார்.
பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் சட்டமேல்சபை கூடியது. அப்போது, பிரதான எதிர்க்கட்சியான, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணியில் உள்ள, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் எம்.எல்.சி., ஷசி யாதவ், தன் கேள்விக்கு அரசு அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இடையில் குறுக்கிட்ட முதல்வர் நிதிஷ், ''நாங்கள் நிறைய செய்துள்ளோம். முந்தைய அரசு எதுவுமே செய்யவில்லை,'' என்று கூறினார்.

இதனால், சட்டமேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், லாலு பிரசாத் மனைவியுமான ரப்ரி தேவி அதிருப்தி அடைந்தார். அப்போது அவர், ''நீங்கள் பதவியேற்பதற்கு முன்பு வரை, எந்த வேலையும் செய்யப்படவில்லை என, குற்றஞ்சாட்டுகிறீர்கள். தரவுகளை எடுத்து பாருங்கள். நாங்கள் செய்ததை புரிந்து கொள்வீர்கள். உங்களின் கூற்றுப்படி, நீங்கள் முதல்வராக பதவியேற்ற, 2005-க்கு முன் வரை, பெண்கள் ஆடைகள் கூட அணியவில்லை... அப்படித் தானே,'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் நிதிஷ் கூறியதாவது; ''பெண்களுக்கு தற்போது மரியாதை கிடைப்பது போல் இதற்கு முன்பு ஒருபோதும் கிடைத்ததில்லை. பெண்களின் நலனுக்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்தது என்ன? உங்கள் கணவர் சிறை சென்றதால், நீங்கள் முதல்வரானீர்கள். உங்களுடன் கூட்டணி வைத்ததற்காக வருத்தப்படுகிறேன்,'' என்று அவர் பதிலளித்தார்.

இதற்கு கடுப்பான ரப்ரி தேவி, சட்டமேல்சபையில் இருந்து வெளிநடப்பு செய்ததோடு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ''அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு, சட்டமேல்சபைக்கு முதல்வர் நிதிஷ் குமார் வருகிறார். அவர் பெண்களை மதிப்பதில்லை. இன்று என்னை இரண்டாவது முறையாக அவர் அவமரிதை செய்தார். பெண்களை அவமதிப்பதை நிதிஷ் நிறுத்தும் வரை நாங்கள் சபையை புறக்கணிப்போம்,'' என்று கூறினார்.
இதற்கு பீஹாரின் முன்னாள் துணை முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் நிதிஷ் குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்று கோரிக்கை வைத்தார்.
English Summary
Nitish comes to the Legislative Assembly after smoking too much ganja Former Chief Minister alleges