ஒரே நாளில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி.! கேரளாவில் எகிறும் பாதிப்பு.!
OMICRON IN KERALA
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி கொண்டு இருக்கிறது. நாட்டில் முதல் பாதிப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மருத்துவர் உள்பட 2 பேருக்கு கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலத்தில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் டெல்லியில் 57 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கேரளத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரளா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவிக்கையில், "கேரளத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில், 6 பேர் கொச்சி விமான நிலையத்தில் வைத்து தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிரிட்டனிலிருந்து திருவனந்தபுரம் திரும்பியபோது ஒருவருக்கும், கடந்த டிசம்பர் 10-ம் தேதி நைஜீரியாவிலிருந்து வந்த இருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. மொத்த எண்ணிக்கை 24 பேர்." என்று வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.