'இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஹிந்தி நண்பன்; ஊழலை மறைக்க மொழி அரசியல் செய்கின்றனர்'; அமித்ஷா பேச்சு..!
They are doing language politics to hide corruption Amit Shahs speech
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. ஹிந்தி திணிக்கப்படுவதாக தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூறிவருகின்றன. இதனை ஆளும் பா.ஜ., மறுத்து வருகின்றது. இந்நிலையில் ''ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் பேசும் போது கூறியுள்ளார்.
அங்கு அவர் பேசுகையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், அலுவலக மொழிகள் துறையின் கீழ், இந்திய மொழிகள் பிரிவை மோடி அரசு அமைத்துள்ளது எனவும், இந்த துறையானது தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மேம்படுத்துவதற்காக செயல்படும் என பேசியுள்ளார்.

அத்துடன், டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு அவர்களின் மொழிகளில் கடிதம் எழுதுவதக்கவும், தங்களின் ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இதுவே எனது பதில் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்; ''அவர்கள் என்ன சொல்கிறார்கள்? தென் மாநில மொழிகளை நாங்கள் எதிர்ப்பதாக சொல்கிறார்கள்? இது எப்படி சாத்தியமாகும்? நான் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன். நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து வந்துள்ளார். எப்படி நாங்கள் அதனை எதிர்ப்போம்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் மொழிகளுக்காக பணியாற்றியுள்ளோம்.'' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமித்ஷா பேசுகையில், தமிழக அரசுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான பாடங்களை தமிழி்ல் மொழி பெயர்க்க உங்களுக்கு தைரியம் இல்லை என்றும், இதனை அவர் இரண்டு ஆண்டுகளாக நான் சொல்லி வருவதாகவும், அதை கூட உங்களால் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளதோடு, தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவோம் என்று அறிவித்துள்ளார்.

மேலும், ''மொழியின் பெயரால் விஷத்தை பரப்புபவர்களுக்கு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் உள்ள மொழியை பிடிக்கிறது. ஆனால், இந்திய மொழியை பிடிக்கவில்லை. எந்த இந்திய மொழிக்கும் ஹிந்தி போட்டி கிடையாது என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். மொழியின் பெயரால் நாட்டில் ஏற்பட்டு உள்ள பிளவு போதும். இனிமேலும் அப்படி நடக்கக்கூடாது.'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஹிந்தி நண்பனாக உள்ளது. எனவும், அனைத்து இந்திய மொழிகளும் ஹிந்தியில் இருந்து பலம் பெறுகிறதாகவும், அதேபோல், அனைத்து இந்திய மொழிகளில் இருந்தும் ஹிந்தி பலம் பெறுகிறது எனவும் அமித்ஷா பேசியுள்ளார்.
English Summary
They are doing language politics to hide corruption Amit Shahs speech