வசமாக சிக்கிய திமுக! ஒரே அணியில் திரண்ட தவெக, பாமக, அதிமுக, நாதக, பாஜக!
ADMK PMK BJP TVK NTK Condemn MK STalin DMK protest
தமிழ்நாட்டில் ஆளுனரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று போராட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகி இன்று போராட்டம் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் வழங்குவதில்லை, 5 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும், கூட்டம் கூடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், சுவரொட்டி ஓட்ட அனுமதியில்லை என்று அனுமதி மறுக்கும் போலீசார், இப்போது எப்படி திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர் என்று, பாமக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழக தலைவர்கள் ஒரே அணியியாக கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு.
ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால் மாண்புமிகு ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு திமுக பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, காவல்துறை, சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
பாமக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழக தலைவர்கள் கண்டன விவரம் பின்வருமாறு:
பாமக அன்புமணி இராமதாஸ் : பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு அனுமதி கோரி 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அந்த நியாயங்கள் அனைத்தும் திமுகவின் போராட்டங்களுக்கும் உண்டு. ஆனால், பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, திமுக போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களுக்கு மட்டும் அஞ்சி நடுங்கி அனுமதி தர வேண்டுமா? என்றெல்லாம் மக்கள் வினா எழுப்புகிறார்கள். அவற்றுக்கு காவல்துறையும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும்.
காவல்துறை என்பது மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அது பாமகவுக்கு காவல்துறை என்றால், திமுகவுக்கும் காவல்துறையாகத் தான் இருக்க வேண்டும். தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிடக் கூடாது. பாமகவுக்கு ஒரு நீதியையும், திமுகவுக்கு ஒரு நீதியையும் காவல்துறை கடைபிடிக்கக்கூடாது. திமுக அரசின் அதிகாரக் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் காவல்துறை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் பாடம் புகட்டுவார்கள்.
அதிமுக கண்டனம்: எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக போலீஸ், கவர்னருக்கு எதிராக மேடை,மைக் செட்டுடன் ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு மட்டும் இரவோடு இரவாக அனுமதி அளித்தது எப்படி? Police Act படி 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியெல்லாம் திமுகவுக்கு கிடையாதா? - அதிமுக வழக்கறிஞர் இன்பத்துறை.
தமிழக வெற்றிக் கழகம்: ஜனநாயக சக்திகள், எதிர்க் கட்சிகள், மகளிர் அமைப்புகள் போராடுவதற்கு அனுமதி தர மறுத்த காவல் துறை.
இன்று திமுக கட்சி போராடுவதற்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?
ஆளுநருக்கு எதிராக போராடுவது உங்கள் உரிமை.தவறில்லை.சட்டமன்ற மரபை மீறியது தவறு.
ஆனால் உங்களுக்கு மட்டும் காவல் துறை அனுமதி கொடுத்தது எப்படி?
சட்டம் எல்லோருக்கும் சமமாக இருக்கிறதா? பாசிசம் ஒழிக - லயோலா மணி!
நாம் தமிழர் கட்சி : அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்காது கைதுசெய்த காவல்துறை, திமுக அரசு ஆளுநருக்கு எதிராக (?) நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்குகிறது?
நேற்று அறிவிக்கப்பட்டு, இன்றைக்கு ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இப்படி ஒரே நாளில் மற்ற கட்சிகளுக்கு போராட்ட அனுமதியை வழங்குமா காவல்துறை? - இடும்பாவனம் கார்த்தி
English Summary
ADMK PMK BJP TVK NTK Condemn MK STalin DMK protest