"தமிழர் இனம் ஈழத்தில் ஒழித்த பேனா".. தமிழ்கடலில் இது வேணா.!! - அதிமுக கல்யாணசுந்தரம்..!!
AIADMK Kalyanasundaram criticized Karunanidhi pen statue
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பிற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது.
பல அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நினைவுச் சின்னத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இதற்கு மத்திய வனம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் நிபுணர் குழு வங்கக்கடலில் மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூட்டத்தில் 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது மெரினா கடற்கரையின் பெயர் இனி பேனா கடற்கரை என மாறிவிடும். மெரினாவின் அழகே கட்டுமரம் தான். மீனவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடக் கூடாது. மத்திய அரசு உடனடியாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கியது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் அதிமுக பிரமுகரும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் ஆசிரியருமான கல்யாண சுந்தரம் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஊழலை மையாக்கி ஊரெல்லாம் கறை செய்த பேனா... மாணவன் உதயக்குமார் மாசற்ற உயிர் குடித்த பேனா.. தேன் போல விடம் தெளித்து நச்சு இலக்கியங்கள் உதிர்த்த பேனா... அரசியல் நாகரிகம் அழித்த பேனா... தமிழர் இனம் ஈழத்தில் ஒழித்த பேனா... ஐயோ இது அறம்சிறிதும் பேணா பேனா.. தமிழ்கடலில் இது வேணா... வேணா!!" என கவிதை வடிவில் தனது எதிர்ப்பை பதிவுத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
AIADMK Kalyanasundaram criticized Karunanidhi pen statue