பெண்களின் திருமண வயது 21 : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


பெண்களின் திருமண வயது 21 என்ற முடிவை கைவிட வேண்டும் என்று, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 வயதாக உயர்த்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவிலிருந்து கடுமையாக மாறுபட்ட கருத்தை மாதர் சங்கம் கொண்டுள்ளது.  மிக அடிப்படையான ஊட்டச்சத்து, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற மக்களின் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய அரசு தவறியுள்ள சூழலில், ‘பெண்களை ஆளுமைப்படுத்துவது’ என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கை எந்த பலனையும் அளிக்கப்போவதில்லை.

சொல்லப்போனால், இந்நடவடிக்கை எதிர்விளைவை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.  ஏனெனில், பெண்களின் திருமண வயதை உயர்த்துவது என்பது ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுப்பது என்பதன் மீது மேலும் தாக்குதல் தொடுப்பதாகவே இருக்கும்.  தான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்வது என்பது ஏற்கனவே எளிதில் செய்ய இயலாத ஒன்றாக உள்ளபோது, பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது என்பது இளம்பெண்ணின் பாலுணர்வை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இருந்திடும்.  

இளம் வயதினர் இருவர் பரஸ்பர சம்மதத்தோடு பாலுறவு கொள்வதை குற்றமாக ஆக்கி, ஆள்கடத்தல், பாலியல் வல்லுறவு ஆகிய குற்றங்களோடு, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் உள்ளிட்ட இதர குற்றச்சாட்டுகளை சுமத்தி, சம்பந்தப்பட்ட இளம்வயதினர் இருவரையும் பிரிப்பதோடு, சம்பந்தப்பட்ட இளைஞன் சிறையிலடைக்கப்படவும் வழிவகுக்கப்பட்டது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.  நமது அனுபவத்திலும் நாம் இதைப் பார்த்திருக்கிறோம்.  எனவே, இந்திய அரசியல் சாசனம் பெண்களுக்கு அளித்துள்ள தனிப்பட்ட உரிமை மற்றும் சுயாட்சிக்கான உரிமை ஆகியவற்றை இந்நடவடிக்கை பாதித்திடும். 

பாலின சமத்துவத்தை ஏற்படுத்திட பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்ற வாதமும் போலியான ஒன்றாகும்.  எந்தவொரு நபரும் 18 வயதை எட்டியவுடன் வாக்களிப்பதற்கான உரிமையையும், ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கான திறனை பெறுகிறார்கள்.  எனவே, ஆண்களின் திருமண வயதும் 18 ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாதர் சங்கம் ஏற்கனவே முன்வைத்தது.

இருபாலினத்தினர் இடையேயும் சமத்துவத்தை ஏற்படுத்திட ஆண்களின் திருமண வயதை 18 ஆகக் குறைக்க வேண்டும் என 18வது சட்ட கமிஷனும் கூட பரிந்துரைத்தது.  இவ்வாறு ஆண்களின் திருமண வயதைக் குறைப்பது என்பது பல்வேறு கிரிமினல் தண்டனைக்கு இளைஞர்கள் உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்திடும். 

ஐசிடிஎஸ், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பெண்களின் உடல்நலன் பேணும் திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்க மறுக்கும் அரசு, திருமண வயதை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வது என்பது மக்களின் கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கையே ஆகும்.  இவர்கள் குறிப்பிட்டுள்ளபடி பெண்களின் ஆரோக்கியம் என்பது பிறந்ததிலிருந்தே குறைவாகவே உள்ளது எனில், 21 வயதில் திருமணமாகி அதன் பின் குழந்தையைப் பிரசவிப்பதன் மூலம் மகப்பேறு மற்றும் குழந்தை நலன் அல்லது பிரசவகால இறப்பு ஆகிய நிலைமைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாது.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டுமென மாதர் சங்கம் கோருகிறது" என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி சுகந்தி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIDWA against woman marriage age issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->