அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் திருப்பம்: அப்பவே சொன்னானே... கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!
Anna University Student Abuse case shocking update
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் ரீதியாக தாக்கிய சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உதவி ஆணையர் பாரதிதாசன் தலைமையிலான குழுவுடன் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது.
இந்த நபரை மாணவி அடையாளம் காட்டினால் உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாத நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வன்கொடுமை சம்பவத்திற்கான விசாரணையை அண்ணா பல்கலைக்கழகம் விசாரணைக் குழு அமைத்து நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி, இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது.
டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை திரு. ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த ஸ்டாலினின் மாடல் அரசு, எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Anna University Student Abuse case shocking update