மும்மொழி வேண்டுமா என்பது குறித்து தமிழகத்தில் மார்ச் 01-தேதி முதல் 90 நாட்கள் வரை பா.ஜ.க , கையெழுத்து இயக்கம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;
தமிழகத்தில் தி.மு.க.,வினர் குறிப்பாக அமைச்சர்கள் மும்மொழி கொள்கை என்றால் ஹிந்தியை திணிப்பதாக தவறான பிரசாரத்தை முன் வைக்கின்றனர். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு பள்ளிகளை விட அதிகமாக இருக்கின்றனர்.
அவர்களின் கல்வி குறித்து ஓராண்டுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்த ஆவணங்களின் படி எடுக்கப்பட்ட குறிப்புகளில் 52 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர். தனியார் பள்ளியில் இருந்து மாணவர்கள் அதிகம்.

சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்தில் பயில்வராக இருந்தால் அவர்கள் ஹிந்தி படிக்கின்றனர். தமிழகத்தில் மெட்ரிகுலேஷனில் படிப்பவர்களுக்கு தமிழ் மொழி என்று எங்கேயும் கட்டாயமாக இல்லை. தமிழக மெட்ரிகுலேஷனை பொறுத்தவரையில் ஆப்ஷனல் மொழி என்ன என்றால் தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, சமஸ்கிருதம், ஹிந்தி, உருது, பிரெஞ்ச் மொழிகளை தேர்ந்து எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆங்கில வழியில் மெட்ரிக்குலேஷனில் படிப்பவர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் உள்ளன. 56 லட்சம் மாணவர்கள் வேற படிப்பில் உள்ளனர். 52 லட்சம் அரசு பள்ளி மாணவர்களை மட்டும், கட்டாயப்படுத்தி ஆங்கிலம், தமிழ் என 02 மொழிகளை தான் படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம் என்றும் அவே குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர், கூறுகையில்; தமிழக அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மாறுகின்றனர். தமிழகத்தில் இந்த சந்தை வியாபாரம் மட்டுமே 30,000 கோடி ரூபாயாக உள்ளது. இன்று தி.மு.க.வைச் சேர்ந்தவர் தான் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவராக பி.டி. அரசகுமார் இருக்கிறார். முதலில் இவர் பா.ஜ.,வில் இருந்தார்.
அரசு குறிப்பின் படி 56 லட்சம் மாணவர்கள் என்று நான் கூறினேன். ஆனால், அரசகுமார் 68 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்று கூறுகிறார். எல்லோரும் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் இரு மொழி கொள்கையை வைத்துள்ளனரா என்பது எனது முதல் கேள்வி எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து, 'தமிழ் தேசியம் பேசும் சீமான் 2016ல் தேர்தல் வாக்குறுதியில் விருப்ப மொழியாக ஹிந்தி உள்பட உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளும் இருக்கலாம் என்று கூறுகிறார். ஆனால், இப்போது ஹிந்தி என்ற வார்த்தை தமது தேர்தல் அறிக்கையில் இல்லை என்று மறுக்கிறார்.
இன்றைக்கு புதிய கல்விக்கொள்கை என்பதும் அதேதான். 5ம் வகுப்பு வரை கட்டாய தமிழ் மொழி உள்ளது. இன்று தமிழகத்தில் பயிற்று மொழி, சி.பி.எஸ்.இ,, பள்ளி என எந்த போர்டாக இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் பயிற்று மொழி உள்ளது. ஆங்கிலம் என்பது கட்டாய பாடமொழி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அண்ணாமலை அவர்கள் ' அடுத்து நடிகர் மற்றும் த.வெ.க., தலைவர் விஜய் பற்றி கூறுகிறேன். அவர் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த பள்ளியின் பெயர் விஜய் வித்யாஸ்ரம். அவரது இடத்தை 2017ம் ஆண்டு முதல் 2052 வரை 35 ஆண்டுகளுக்கு அவரது இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்.
அந்த அறக்கட்டளை விஜய் தந்தை சந்திரசேகர் பெயரில் பதிவாகி இருக்கிறது. சந்திரசேகர் டிரஸ்ட் நடத்தக்கூடிய பள்ளிதான் விஜய் வித்யாஸ்ரம். அவர்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஹிந்தி உள்ளது. அமைச்சர் மகேஷ் குழந்தை பிரெஞ்ச் படிக்கிறார்' என்று பேசியுள்ளார்.

மேலும் ' இன்றைய அரசியல்வாதிகள் வெளியில் வந்து, அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் 2 மொழிகள் படியுங்கள் என்று எதை வைத்து கூறுகின்றனர். சென்னையில் தி.மு.க., எம்.பி., கலாநிதி வீராசாமி குடும்பம் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துகிறது. இந்த பள்ளியில் 2வது மொழியாக தமிழ், ஹிந்தி,பிரெஞ்ச் என எதையாவது எடுத்துக் கொள்ளலாம்.
மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ் கட்டாயம் இல்லை. அங்கு தமிழும் படிக்கலாம், ஹிந்தியும் படிக்கலாம், பிரெஞ்சும் படிக்கலாம். இன்று அண்ணாமலை சொன்ன தரவுகளுக்கு ஆதாரம் இல்லை என்று தமிழக அரசு கூறுகிறது. இது வெட்கக்கேடு' என பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், 'தமிழகத்தில் 30 லட்சம் பேர் மும்மொழி கொள்கை படிக்கின்றனர் என்று நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாடு அரசு என்ன சொல்ல வேண்டும்? இவ்வளவு டேட்டா கைகளில் இருக்கிறது, சாப்ட்வேர் இருக்கிறது. நான் 30 லட்சம் என்று சொன்னதற்கு ஆதாரம் இல்லை என்றால் நீங்கள் (தமிழக அரசு) ஆதாரம் கொடுங்கள்.

எத்தனையோ ஆயிரம் பேர் வேலை பார்க்கும் தமிழக அரசு, மும்மொழி கொள்கையில் இருப்பது 30 லட்சம் பேரா, 20 லட்சம் பேரா என்று மழுப்புகிறீர்கள். அதற்கு மேல்தான் படிக்கின்றனர். நான் குறைவாகத்தான் 30 லட்சம் பேர் என்று கூறுகின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், 'தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். தமிழகத்தில் எத்தனை பேர் மும்மொழியில் படிக்கின்றனர் என்று பார்ப்போம். மக்களுக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய், சீமான் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எதற்காக வீண் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்? மக்களுக்கு உபத்திரவம் கொடுப்பதற்காக இண்டி கூட்டணி சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்? நீங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துகிறீர்கள், அதில் தமிழ் கட்டாயம் இல்லை.
நாங்கள் திரும்ப, திரும்ப சொல்வது என்னவென்றால் ஹிந்தி வேண்டாம் என்று சொன்னால், 3வது மொழியாக ஏதேனும் ஒரு மொழி படியுங்கள் என்று சொல்கிறோம். மும்மொழி கொள்கையில் 3வது மொழி என்பது ஒரு பேப்பர் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் கூறுகையில், 'மலையாளம் எடுக்கிறீர்கள் என்றால் ஒரு பேப்பர் மலையாளம் கூட வரும். நீங்கள் படிக்கும் இயற்பியல் எல்லாம் 5ம் வகுப்பு வரை தமிழில் தான் இருக்கும். 5 முதல் 8ம் வகுப்பு வரை தமிழில் இருப்பதற்கான முயற்சி எடுக்கணும். மிச்சம் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கணும். ஒரேயொரு 3வது பேப்பர் மலையாளமோ, தெலுங்கோ, ஹிந்தியோ ஒரு பேப்பர் கூட வரும்.

நம் குழந்தைகள் எல்லா பாடத்தையும் படிக்கவில்லை. ஒரேயொரு பாடத்தை, ஒரேயொரு மொழியில் படிப்பது தான் 3வது மொழி. உலகமே மாறிக் கொண்டு இருக்கிறது. இண்டி கூட்டணியில் இருக்கும் மேற்கு வங்கம், கேரளா,கர்நாடகா, தமிழகம் என 4 மாநிலங்களை எடுத்து, 4 மாநில முதல்வர்களிடம் பேசி உங்கள் மாநிலத்தில் 3வது மொழியாக தமிழை வையுங்கள்.
தமிழ்நாட்டிலே தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். இங்கே எத்தனை பேர் பி.எட் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் மேற்கு வங்கம் சென்று தமிழ் பாடத்தை நடத்தலாம்.
இங்கே நம் மாநிலத்தில் தமிழோ, கன்னடமோ, பெங்காலியோ ஒரு பேப்பர் வையுங்கள். அங்கே இருப்பவர்கள் இங்கே வருவார்கள். அதனால் எதற்காக மக்களை குழப்பி,குழப்பி ஹிந்தியை திணிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். ஹிந்தியை யார் திணிக்கிறாங்க? யார் ஹிந்தியை திணிப்பதாக சொன்னார்கள்? எங்கேயும் கிடையாது.
அரசியல் தலைவர்கள் முதலில் கண்ணாடியை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஒரு நியாயம், ஊரில் உள்ளவர்களுக்கு ஒரு நியாயம். அவர்களின் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், மேலே மேலே போக வேண்டும்.

அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டணும். கோந்து எடுத்து சுத்த வேண்டும் என்பதற்காக இன்றைக்கு தமிழகத்திலே ஒரு டிராமா போடுகின்றனர். அமைச்சர் மகேஷ் நல்ல சட்டையை போட்டுக்கிட்டு, அரசு பள்ளி மாணவர்களோடு கிரிக்கெட் ஆடிட்டு, தோனி மாதிரி ஆடுகிறார் என்று அவரே ட்விட் போட்டு, அது பெருமையல்ல.
அவரது மகனை பிரெஞ்ச் படிக்க வைத்துவிட்டு, 3வது மொழியை மற்ற பிள்ளைகளுக்கு தர மறுக்கிறார். அதை தான் பா.ஜ., தலைவர்கள் நாங்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்றைக்கு தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளை விட அதிக மாணவர்கள் இருக்கின்ற காரணத்தால் தமிழகத்தில் இருமொழி கொள்கை தோற்றுவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாக, நிரூபணமாகிவிட்டது.
1967ல் ஏப்ரல் மாதம், அண்ணாதுரை கணையாழியில் சொல்லவில்லையா? இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களும் 3 மொழி கொள்கையை ஏற்றுவிட்டால் நாங்களும் தமிழகமும் ஏற்போம் என்று சொல்லியுள்ளார். இன்று இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் 3 மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

பக்கத்து கேரள மாநிலத்தில் தமிழ் மொழியில் பாடப்புத்தகம் போட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் தமிழை வளர்க்கின்றனர். நாம் எங்கே வளர்க்கிறோம்? ரிப்போர்ட் படி 2ம் வகுப்பில், 3ம் வகுப்பில் எத்தனை பேர் படித்தார்கள், 5ம் வகுப்பில், 8ம் வகுப்பில் எத்தனை பேர் படித்தார்கள், எத்தனை பேர் 8ம் வகுப்பில் தமிழில் ஒரு பத்தியை படிக்கமுடியாமல் தடுமாறினார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
ஆனால் இண்டி கூட்டணி சும்மா எல்லாரும் சேர்ந்து 3வது மொழி வேண்டாம், வேண்டாம் என்று சொன்னால் பாதிக்கப்படுவது நமது குழந்தைகள். நேரடியாக நாங்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். பா.ஜ., மார்ச் 1ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் கையெழுத்து இயக்கத்தை நடத்த இருக்கிறது. கிராமத்தில் இருந்து நகரம் வரை பா.ஜ., தொண்டர்கள் மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆரம்பித்து மார்ச், ஏப்ரல், மே 3 மாதம் 90 நாட்கள் முழுமையாக தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா மக்களையும் வீடுகளில் சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்த இருக்கிறோம்.
உங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? உங்கள் குழந்தைக்கு மும்மொழி வேண்டுமா? என்ன மொழி வேண்டும் என்று கேட்போம். நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருங்கள், நாங்கள் மக்களை நோக்கி போகிறோம். ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் கணக்கு எடுத்து, யாருக்கு எந்த மொழி, 3வது மொழியாக படிப்பதில் ஆர்வம் இருக்கிறது என்பதை மொத்தமாக சேகரித்து, நேரிடையாக ஜனாதிபதியை சந்தித்து பா.ஜ., குழு இந்த அறிக்கையை அளிக்க இருக்கின்றோம்.

90 நாட்கள் முடிந்து, ஜனாதிபதியிடம் இந்த அறிக்கையை நேரடியாக கொடுக்கிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் சுயலாபத்துக்காக, அவர்களின், அவர்களின் குடும்பங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, சதி செய்து தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 3வது மொழியை கொடுக்க மறுக்கின்றார்கள்.
வேண்டும் என்றே ஒரு தலைமுறையை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை தடுப்பதற்காக நேரிடையாக ஜனாதிபதியிடம் 3 மாதம் கையெழுத்து வேட்டை நடத்தி, தரவுகளுடன் தமிழக அரசுக்கு எதிரான புகாரை தொகுத்து கொடுக்க இருக்கின்றோம். அதற்கான குழுவில் யார் தலைவர், யார் உள்ளனர் என்பது பற்றிய விவரங்களை விரைவில் சொல்ல இருக்கின்றோம் என்று அண்ணாமலை அவர்கள்
பேட்டிளித்துள்ளார்.
தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது; நாளை காலையில் அமைச்சர் மகேஷ், மத்திய அரசுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழ் ஆசிரியர்கள் வேண்டும், 3வது மொழியாக தமிழ் இருக்கும் என்று கடிதம் எழுதினார் என்றால், நாளை சாயந்தரம் பிரதான் அவர்களை சந்தித்து, என்ன வேண்டுமோ செய்து கொண்டு வருகிறோம். நான் இதை கல்வி அமைச்சருக்கு சவாலாக விடுக்கிறேன்.
நாளை காலையில் கேந்திரியா வித்யாலயாவில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து பணிமாறுதல் பணியில் இருக்கும், மத்திய அரசு பணியில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் 3வது மொழியாக தமிழ் மொழியாக சொல்லிக் கொடுக்க போகிறோம் என்று அமைச்சர் மகேஷ் கடிதம் எழுதினால் நாளை சாயந்தரம் நான் டெல்லியில் இருக்கேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.